எங்க ஊர் எல்லையில் எங்க சாதி அமைப்பு வழிபாட்டு முறைக்காக கட்டப்பட்டது தான்(பெயர் குறிப்பிட விருப்பம் இல்லை) அய்யனார் கோவில். (எங்கள் சாதி மட்டுமல்லாது எங்கள் சாமியை குலதெய்வமாக வழிபடும் மற்ற சாதிப்பிரிவினரும் வந்து வழிபடுவதற்காக கட்டப்பட்டது)
பிறகு ஊர்க்காரர்கள் (எங்கள் சாதி அமைப்பினர் மட்டும்) அந்தக் கோவில் பராமரிப்புக்காகவும், சாமிக்கு பூசைகள் தொடர்ந்து செய்வதற்காகவும் சில சட்டங்களை ஏற்படுத்தினர். அதாவது அந்தக் கோவிலுக்கு அதிக நிதி கொடுத்தவருக்கு, கோவிலில் வரும் வருமானத்திலிருந்து (உண்டியலில் சேரும் தொகை தவிர்த்து) எங்கள் ஊரில் (எங்கள் சாதி அமைப்பினர் மட்டும்)எத்தனை தலைக்கட்டு இருக்கிறதோ அத்தனை பங்காகப் பிரித்து அதில் ஒரு குறிப்பிட்ட அளவு பங்கை, நிதி அதிகமாக கொடுத்த குடும்பத்திற்கு குடுத்து விடுவது என்றும், அந்தக் குடும்ப உறுப்பினர்களே அதிகப்படியான நாட்களில் சாமிக்கு பூசை (கோவில் முறை) வைப்பது என்றும் வகுத்துக் கொண்டார்கள்.
மற்ற குடும்பத்தார்கள் பிரிதொறு நாட்களில் சாமிக்கு பூசை(கோவில் முறை) வைப்பது வழக்கம். இது நடப்புத் தலைமுறைக்கு முந்தைய தலைமுறைவரை சரிவர அந்த அந்த காலகட்டங்களில் ஒவ்வொரு வீட்டாரும் அவரவர் முறை வருகிற பொழுதும் தவறாமல் கடைபிடித்தனர். காரணம் போன தலைமுறைவரை எங்கள் ஊரில் யாரும் ஒரு பள்ளிப் படிப்புகூட படிக்கவில்லை என்பதால் ஊரில் உள்ள சொந்த மற்றும் கோவிலிக்குச் சொந்தமான விவசாய நிலங்களில் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தினர். மேலும் போன தலைமுறைகள் வரை ஒரு வீட்டிற்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று அண்ணன் தம்பிகள் இருந்தனர். அதனால் கோவில் முறை வருகிறபோது குடும்பத்தில் ஆண்கள் யாராவது ஒருத்தர்(மற்றவர்கள் வேலை நிமித்தமாக வெளியூர்களில் சென்று இருந்தால் ) அந்த வேலையை (சாமிக்கு செய்யும் பூசையை) செய்து விடுவார்கள்.
ஆனால் இன்றைக்கு வீட்டிற்கு ஒரு பிள்ளை என்று வந்து விட்டது. மேலும் படிப்பறிவு வளர்ந்து விட்டதாலும் விவசாயத்தில் ஆதாயம் குறைந்து விட்ட நிலையிலும், வருமானத்திற்காகவும், வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காகவும், வேலையின் காரணமாக வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் நிலைக்கு பெரும்பாலான குடும்பங்கள் தள்ளப்பட்டு விட்டனர். இதனால் அவர்கள் சாமிக்கு பூசை வைக்கும் முறை வருகிறபோது செய்வதறியாது தவிக்கின்றனர்.
சாமிக்கு செய்யவேண்டியதை செய்யவில்லை என்றால் தனக்கும் தன் குடும்பத்திற்கும் கடவுள் தண்டனை கொடுத்து விடுவார் என்கின்ற பயம் ஒருபக்கம் இருக்க, அதை விட ஊராரின் மிரட்டல்களுக்குதான் அதிகம் பயப்பட வேண்டியிருக்கிறது. அதாவது கோவில் முறை வைக்க தவறினாலோ அல்லது வைக்க நாங்கள் விரும்பவில்லை என்று ஒதுங்கினாலோ, சொந்த ஊருக்கும் உங்களுக்கும் இனி எந்த (சம்)பந்தமும் இல்லை என்று எழுதிகுடுத்து விடவேண்டும் என்று ஊரில் ஒரு சட்டம் இருக்கிறதுக்குப் பயந்து, இன்னைக்கு இருக்கும் அவசர யுகத்தில் தனக்கு என்னைக்கு சாமிக்கு பூசை வைக்கும் முறை வரும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு அந்த நாட்களில் ஊரில் இருக்கும் வசதி குறைந்த பங்காளி குடும்பங்களுக்கு அதிகத்தொகை கொடுத்து சாமிப் பூசைகளை செய்வதென்பது அந்தக் குடும்பங்களுக்கு பெரிய சிரமமாக உள்ளது.
வெளிநாடு அல்லது வெளியூர்களில் இருப்பவர்களுக்கு இப்படிப்பட்ட சடங்குகள் சிரமத்தை குடுக்கிறது. அதனால் சாமிக்கு பூசை வைக்கும் முறையை யாராவது ஒருவரிடம் மாதச் சம்பளமாக அவர் கேட்கும் தொகையை குடுத்துப் பார்க்கச் சொல்லலாம், என்றால் கோவிலில் கிடைக்கும் பெரிய வருமானத்தை வைத்திருக்கும் குடும்பங்கள் இதை ஒத்துக்கொள்வதில்லை. ஆகையால் இந்தச் சிரமங்கள் வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் எங்க ஊர் (சாதி)காரர்களுக்கு இன்றளவும் சிரமமாகத்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து: காலம்காலமாக கடவுளை நம்பவில்லையென்றாலோ அல்லது கடவுள் நம்பிக்கைக்கு எதிராக பேசினாலோ, நரகத்திற்குப் போவார்கள் என்று சொல்லிச் சொல்லி மனிதனை பயமுறுத்தி வந்ததால் இன்றளவும் மனிதன் கடவுள் நம்பிக்கை சரிதானா? சடங்குகள் சரிதானா? என்பதை ஆராய்வதற்குக்கூட பயப்படுமளவுக்கு அவன் மனதில் கடவுள் பற்றிய பயம் மேலோங்கிவிட்டது.
மேலும் கோவில்கள், கடவுள்கள் என்பது மனிதனை பதுகாப்பதற்காக (வெறும் நம்பிக்கை அளவிலே) உருவாக்கப்பட்டதே. தவிர மனிதன் கடவுளை காப்பதாகவோ, கடவுள் நம்பிக்கை மனிதனை முடக்குவதாக இருக்கக் கூடாது என்பது என் எண்ணம்.
2 comments:
வணக்கம், தங்கள் பதிவுகள் நன்று, ஆனால் இன்று "சாதி" வாடை சற்று அதிகமாக வீசுகிறதே?
"சாதி இரண்டொழிய சாற்றுங்கால் வேறில்லை, நிதி வழுவா நெறிமுனையில் இட்டார் பெரியோர், இடாதோர் இழிகுலத்தோர், பட்டாங்கில் உள்ளபடி! (பிழையிருந்தால் தமிழுலகம் மன்னிக்க!) ஞாபகம் உள்ளதுதானே? பலரும் உங்கள் பதிவுகளைப் படிக்கிறார்கள், நீங்கள் இப்படி உங்களை உங்கள் சாதியால் (உங்கள் சாதிப்பெயரை வெளியிடாவிட்டாலும்)அடையாளப்படுத்திக்கொள்ளலாமா ஐயா?
எனக்கு சாதி மத நம்பிக்கைகள் கிடையாது, நான் பெயர் குறிப்பிடாத அந்தக் கோவிலுக்கும் அந்த ஊர் மக்களுடன் என்னை அடையாளப் படுத்திக்க வேறு வழியின்றி அப்படி எழுத வேண்டிய தாயிற்று. பொருத்தருள்க நண்பரே
Post a Comment