கருத்தின் அடிப்படையில் நாம் மற்றவர்களுடன் உறவை உருவாக்கிக்கொள்ளும் போது, அங்கு உறவைவிட கருத்தை நிறைவேற்றுவதுதான் முக்கியமானதாகப் போய்விடுகிறது.
தெரிந்தவற்றின்(known) அடிப்படையில்தான் நம் மனம் இயங்கி வருகிறது. மனம் தனக்குத் தெரிந்தவற்றிலிருந்து கருத்துக்களை உருவாக்கிக் கொள்கிறது. கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது அங்கு மனம் முக்கியமான பங்கை வகிக்க ஆரம்பிக்கிறது.
கருத்துக்களை எப்படி நிறைவேற்றுவது என்ற வழிமுறைகளைக் கண்டுபிடித்து, அவற்றை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் நம் மனம் ஈடுபட ஆரம்பித்துவிடுகிறது. அப்போது உறவு புறக்கனிக்கப்படுகிறது.
நான் இந்து, நான் இந்தியன், நான் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவன் போன்றவைகள் நமக்கு நன்கு தெரிந்தவைகள். மதம், நாடு, கட்சி ஆகியவர்றை பற்றி பல ஆழமான கருத்துக்களை இவைகள் உண்டாக்கிவிடுகின்றன. இந்தக் கருத்துக்களின் காரணமாக நாம் வேறு மதங்களைச் சேர்ந்தவர்களிடமும், வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களிடமும், வேறு அரசியல் சித்தாந்தங்களைப் பின்பற்றி வருபவர்களிடமும் நாம் உறவு வைத்துக்கொள்ள விரும்புவதில்லை. மாறாக அவர்களை நாம் விரோதிகளாகவே பார்க்கிறோம். அவர்களை அழிக்க முற்படுகிறோம்.
நமக்குத் தெரிந்தவைகள் நம்மை முற்றிலும் கட்டுப்படுத்தி, நம்மை தவறான வழிகளில் இட்டுச் செல்கின்றன.தெரிந்தவற்றின் அடிப்படையில் இயங்கிவரும் மனம், பாதுகாப்பு,, இன்பம், புகழ், ஆடம்பர வாழ்க்கை போன்றவற்றை விரும்பி அவற்றை அடையும் முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்துவிடுகிறது.
கருத்துக்களின் அடிப்படையில் உருவாகும் உறவு போட்டி, பகை, சண்டைகள், பிரிவினை, பொறாமை போன்றவற்றை தான் உருவாக்கும்.