மனித நேயமும் ஆத்திகனும்



கால்கள் கட்டப்பட்டு, கழுத்து வளைக்கப்பட்ட ஆடு , ஐயோ என்னை விட்டுடுங்கடா என்பது போல் ஈனசுரத்தில் கத்திக் கொண்டே சுற்றி இருந்தவர்களைப் பார்க்க, சுற்றி இருந்த கூட்டமோ பயபக்தியோட பூசாரியை பார்க்க, கெடாக்கொம்பு போல மீசை வைச்சிருக்கும் பூசாரி அந்த ஆட்டின் கழுத்தை கரகரவென அறுக்க, ஆட்டின் சத்தமும், இரத்தமும் கண்கள் மேலே சொருக சிறிது சிறிதாக அடங்கியது.



ஒரே வீச்சில் தலை வேறு உடல் வேறாக வெட்டப்பட்டு ஓடி விழுந்த சேவலின் இரத்தமும், ஆட்டின் இரத்தமும் மண் சட்டியில் கொண்டுவரப்பட்டது. அதை பூசாரி ஒரே மூச்சில் குடித்து முடித்து கூட்டத்துக்கு அருளாசி வழங்கினார்.


பிறகு வெட்டப்பட்ட நான்கறிவு, ஐந்தறிவு ஜீவன்கள் சமைத்து சாமிக்கு படைக்கப்பட்டது. அப்போது அந்தக் கூட்டத்தில் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த ஒருவரின் கைபேசியில், மரண தண்டனை என்ற பெயரில் அரேபியாவில் தலை துண்டிக்கப்படும் நிகழ்ச்சி பலர் முன்னிலையில் நடப்பதை பார்த்த எல்லோரும், இது என்ன காட்டுமிராண்டித்தனமா இருக்கு, கொஞ்சம் கூட ஈவு, இரக்கம் இல்லாம வேடிக்கை வேற பார்க்குறாங்கன்னு கூட்டம் பேசிக்கொண்டிருந்தது.


அப்போது அங்கே இருந்த ஒருத்தர் கேட்டார், நீங்கள் செய்ததற்கும், அரேபியாவில் நடப்பதற்கும் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை, இங்கே ஆடு அங்கே மனிதன் எல்லம் உயிர் தான் என்றார். ஆட்டையும், சேவலையும் கொல்லும் போது வராத மனித நேயம், இப்போ மட்டும் எப்படி வந்தது? என்றார்.


உடனே பூசாரி ”இது சாமி சமாச்சாரம் என்றும், இவன் இங்க வந்து நாத்திகம் பேசுறான், நம்ம சடங்கு சம்பிரதாயங்கள கிண்டல் பண்ணுறான், இவன துறத்துங்கடான்னார்.


” முடியை மழித்தால் வளராது என்றால் உங்க சாமிக்கு உங்க மசிரக்கூட குடுக்க மாட்டிங்கடான்னு முணுமுணுத்துக் கொண்டே போனார் அந்த நபர்.


மக்களின் அறிவைக் கிளறிவிட்டு அவர்களுக்கு அறிவுச்சுதந்திரத்தை உண்டாக்க நினைக்க இங்கே கேள்வி கேட்பவன் நாத்திகன், எதையும் ஆராயாமல், மத, சாத்திர, புராணங்கள் போன்ற சமூகக் கட்டுப்பாடுகளை எதிர்த்து கேள்வி கேட்கவிடாமல் மக்களை அப்படியே மடமையிலையே வைத்து இருக்க நினைப்பவன் அல்லது தடைபோடுபவன் ஆத்திகன் என்றால், நாத்திகன் மேலானவன் என்பது என் எண்ணம்.