போட்டியாளன் எதிரியா?

எல்லோருக்கும் வரக்கூடிய குழப்பம். ஒன்றும் தெரியாதவன் போல் நம் அடுத்த இருக்கையில் அமர்ந்திருக்கும் ஆசாமி, நம் போட்டியாளனா? இல்லை நம் எதிரியா? என்பது தான்.


யார் நண்பன்? யார் எதிரி?


நீ முந்தி, நான் முந்தி என வணிகரீதியாக சண்டையிடும் இரு பெரிய நிறுவனங்கள் ஒருவருக்கொருவர் போட்டியாளரா? இல்லை எதிரியாளரா?


முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் போட்டியாளன் வேறு!, எதிரி வேறு!


போட்டியாளனுக்கும், எதிரிக்கும் நூலளவு தான் இடைவெளி. உள்ளூர் குளிர்பான நிறுவனங்களை நிர்மூலமாக்கிய கோக் நிறுவனம் உள்ளூர் நிறுவனத்துக்கு எதிரியே. ஆனால், உலக விற்பனையில் 38% பங்கை வைத்திருக்கும் பெப்சி, கொக்ககோலாவின் தகுதியுள்ள போட்டியாளனே.

சேதுசமுத்திரத் திட்டத்தை கொண்டு வர எதிர்க்கும் எந்த ஒரு எதிர் கட்சியும் ஆளும் கட்சிக்கு எதிரியே!. ஒன்று நினைவில் கொள்ளுங்கள் எல்லா போட்டியாளரும் எதிரிகள் அல்ல.


அப்பொழுது யார் நம் எதிரி?


நாம் இன்னொருவர் தொழிலை முழுமையாக அழிக்க நினைக்கும் போது தான் போட்டியாளன் எதிரியாகிறான். போட்டியாளன் போட்டியில் பின் தங்கிப்போனால், அவனுடைய குறிக்கோள் அவனின் சுய முன்னேற்றமாக இருக்காது, மாறாக நம்மை அழிப்பதாகவே இருக்கும்.(போட்டியாளனாக படுக்கைக்குப் போனவன் விழிக்கையில் எதிரியாகத் தான் கண் விழிப்பான்)


போட்டியாளன் என்பவர் ரேஸில் ஓடிக்கொண்டிருப்பவர், என்றாவது ஒருநாள் அவர் உங்களை, அல்லது நீங்கள் அவரை வெல்ல வேண்டும்.


அடிக்கோடிட்டுப் படியுங்கள்!!


வெல்ல வேண்டும், அழிக்க வேண்டும் என்பதல்ல போட்டியாளரின் நோக்கம். போட்டியாரை அழிக்க நினைப்பது முட்டாள் தனம். போட்டியாளர்கள் காளான்கள் போல முளைத்துக்கொண்டே தான் இருப்பார்கள், அவர்களை அழிக்க நினைக்கும் நேரத்தில் நீங்கள் உங்களை முன்னேற்றிக் கொள்ளலாம்.

ஓட்டப்பந்தயத்தில் நம்மை தள்ளிவிட்டு ஜெயிக்க நினைப்பவன் நம் எதிரி, நம்மை விட வேகம் கூட்டி நம்மை முந்த நினைப்பவன் போட்டியாளன். நமக்கே தெரியாமல் நம்மை வளர்ப்பவன் நம் போட்டியாளன்!. போட்டியாளன் பலத்தை குறைத்தால் நீங்கள் அசுர பலம் பெற்றுவிடலாம் என்று நினைக்க வேண்டாம். அவன் பலத்தைக் குறைத்து மதிப்பிடும் போது நீங்கள் உங்கள் பலத்தை அதிகமாக்கிக் கொள்கிற வாய்ப்பை இழக்கிறீர்கள் என்று அர்த்தம்.

போட்டி இல்லாத உலகம் சோம்பலை வாசல் தெளித்து வரவேற்கும். இவ்வுலகில் தன்னை வெல்ல யாரும் இல்லை என்ற மமதையை ஏற்படுத்தும். போட்டியில்லாத வாழ்க்கை சலிப்பை ஏற்படுத்தும். உங்கள் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும். ஆள் இல்லாத ஊருக்கு இலுப்பை பூவாக மாறிவிடுவீர்கள்.

எட்டடி பாய்ந்த நீங்கள் போட்டியாளன் பத்தடி பாய்வதை தடுத்தால் பிறகு நீங்கள் பதினாறு அடி பாய்கிற சூழல் வாய்க்காமலேயேப் போய்விடும். பன்னாட்டு கார் நிறுவனங்கள் இந்தியாவில் கால்பதித்து டாடா மற்றும் மஹெந்திரா & மஹெந்திராவிற்கு போட்டி ஏற்படுத்த வில்லை என்றால் நமக்கு சொகுசு ஸ்கார்ப்பியோவோ இல்லை குறைந்த விலை டாடா நானோவோ கிடைத்திருக்காது.

ஆக போட்டியாளன் நம் வாழ்வின் மிக முக்கிய அங்கம் வகிக்கிறான். உங்களுக்கு மட்டுமல்ல அவனின் பலமும் குறையாமல் இருப்பது தான் இருவருக்கும் நன்று. இலக்கு என்று ஒன்று இல்லாமல் மனிதனால் இயங்குவது கடினம். நம் இலக்குகளை தேர்ந்தெடுக்க வைப்பவன் நம் போட்டியாளன். மறைமுகமாக ஒரு நண்பனுக்கு உறிய எல்லாத் தகுதிகளும் நம் போட்டியாளனுக்கு இருக்கிறது. தகுதியான போட்டியாளனை அழிக்க நினைப்பது, நம் தலையில் நாமே மண்ணை வாரி போட்டுக்கொள்வதற்குச் சமம்.

கமல் என்ற போட்டியாளன் இல்லை என்றால் ரஜினி இல்லை,

ஜெயலலிதா அரசியலில் இயங்கிக் கொண்டிருப்பதாலே கருணாநிதியால் இன்னும் சுருசுருப்பாக இயங்க முடிகிறது. உங்கள் போட்டியாளன் உங்களை முந்திச்செல்கிறபோது நீங்கள் அவர்களின் டார்கெட்டை தாண்ட முயற்சி செய்வீர்கள். அப்போது அது நீங்கள் இதுவரைக்கும் தொடாத வளர்ச்சியாக இருக்கும். முதல் வேலையாக போட்டியாளனின் நடவடிக்கைகளை கவனிக்கத் தொடங்குங்கள், அவன் பலம், பலவீனம் தெரிந்து விடும், உங்கள் பலம், பலவீனமும் புரிந்து விடும். அதே சமயம் நீங்கள் உங்களை கவனிக்க வேண்டாம் அவன் பார்த்துக்கொள்வான்.

உங்களின் சரி, தவறு, குற்றம், குறை எல்லாம் அவன் எடுக்கும் முயற்சிகளிலிருந்து உங்களை நீங்கள் திருத்திக்கொள்ளலாம்.

நீங்கள் உங்களை சரியாக வளர்ப்பதின் மூலம் உங்கள் போட்டியாளனுக்கு எப்போதும் நேருக்கடி கொடுக்கிறீர்கள். மாறாக போட்டியாளனை எதிரியாக்குவதால் அவன் துரும்பைக் கூட இழக்க மாட்டான், அவனின் வேகத்தை கூட்டிய புண்ணியத்துக்கு நீங்கள் ஆளாகிறீர்கள்!

ஆக, தகுதியுள்ள போட்டியாளன் நம் மறைமுக நண்பனே!.