இப்படியும் சில மனிதர்கள்

நானும் என் நண்பனும் திருச்சியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது. ஞாயிறு விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்துவிட்டு திரும்ப திங்கள் கிழமை காலை ஆறு மணிக்கு பேருந்து பிடித்தால் 8.30 மணிக்கு கல்லூரியில் இருக்கலாம் என்று கணக்குப் போட்டு விடுமுறை நாட்களுக்கு ஊருக்கு வந்து போவது வழக்கம்.

அப்படி ஒரு திங்கள் கிழமை காலை கொட்டாம்பட்டியில் இருந்து திருச்சிக்கு பேருந்து ஏறினோம். பேருந்து இருக்கைகள் நிரம்பி விட்டதால் நானும் என் நண்பனும் நின்று கொண்டு பயனித்தோம். பேருந்து துவறங்குறிச்சி என்ற ஊர் தாண்டி ஐந்து அல்லது ஆறு கிலோமீட்டர் பயணித்திருக்கும், ஐயோ எம்புள்ளையா காப்பாத்துங்களேன்னு ஒரு பெண்ணின் குறல் வண்டிக்குள் கேட்டது.

ஓட்டுநர் உடனடியாக வண்டியை நிறுதினார். அந்தப் பெண்ணின் அருகில் சென்று பார்த்த போது அவர் மடியில் படுத்திருந்த இரண்டு வயது குழந்தை வாயில் நுரைதல்ல பேச்சு மூச்சற்று கிடந்தது. அந்தத் தாய் செய்வதறியாது கண்களில் இருந்து கண்ணீர் கண்ணங்களில் வழிந்தோட அழுதுகொண்டே பேருந்திலிருந்தவர்களைப் பார்த்து எம்புள்ளையக் காப்பாத்துங்க என்று புழம்பிக்கொண்டே இருந்தார்.

நடத்துநர் மற்றும் பயணிகளில் மூத்தவர்கள் சில உத்தியோகஸ்தர்கள் ஆளுக்கொரு யோசனை சொல்லிகொண்டே இருந்தார்களே தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுத்த பாட்டைக்காணோம். நான் நடத்துநரிடம் (ஓட்டுனரை விட நடத்துனர் மூத்தவர் என்பதால்) சார் பக்கத்தில துவறங்குறிச்சிய விட்டா பெரிய ஊர் எதுவும் கிடையாது, வெறும் ஐந்து கிலோமீட்டர்கள் தான் துவறங்குறிசியிலிருந்து வந்து இருக்கோம். அதுனால இந்த குழந்தைய எதாவது ஒரு மருத்துவமனயில சேர்த்திடலாம் வண்டிய திருப்பச் சொல்லுங்க என்றேன்.

இல்ல இல்ல நாங்க அவசரமா போய்கொண்டிருக்கிறோம் அதுனால துவரங்குறிச்சி நோக்கி செல்லும் பேருந்து எதிர் திசையில் வருகிறதா வென்று பார்த்து அந்தப் பெண்ணை ஏறிப்போகச் சொல்லுங்க என்று பெரும்பாலனவர்களிடமிருந்து பதில் வந்தது. அப்பொழுது அந்தப் பெண் (அதிகம் படித்த பெண் இல்லை என்று அவருடைய பேச்சிலே தெரிந்தது) நடந்து கொண்டவிதம் என்னையும், என் நண்பனையும் இன்னும் சிலரை கலங்க வைத்தது. கையில் பத்து ரூபாய் தவிர வேறு பணம் எதும் இல்லை யாராவது கொஞ்சம் பணம் கொடுத்து உதவுங்கள் என்று வெடித்து அழுதார்.

அதற்குள் ஓட்டுநர் எதிர் திசையில் துவறங்குறிச்சி செல்லும் பேருந்து வருது இறங்கிப் போய் ஏறுமான்னு சொல்லி அந்தப்பெண்ணை இறக்கிவிட அந்தப் பெண் மலங்க மலங்க விழித்துக்கொண்டு பைத்தியம் பிடித்தவர் போல அந்த வண்டி நோக்கிப் போகையில் யாராவது வந்து உதவ மாட்டார்களா என்பது அவரது பார்வையிலும், அழுகையிலும் தெரிந்தது. அந்தப் பார்வை என்னையும் என் நண்பனையும் அழுத்த நாங்கள் இருவரும் ஒடிச் சென்று அந்தப் பெண்ணோடு ஏறிக்கொண்டோம், எங்களோடு திருச்சி நோக்கிப் பயனித்தவர்கள் தம்பி நீங்க வாங்க வண்டி உங்களுக்காக நீங்க திரும்புகிறவரை இங்க நிக்காது என்று சொல்லி அழைத்தார்கள்.

நாங்கள் வரவில்லை நீங்கள் செல்லுங்கள் என்று கூறி அந்தப் பெண்ணோடு புறப்பட்டோம். எங்களுக்கும் அந்தப் பெண்ணிற்கும் பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு அந்தப் பெண்ணை அமைதிப்படுத்த முயற்சித்தோம். அழுகையும் புழம்பலும் நின்ற பாடில்லை. ஒட்டுநர் வண்டியை விரைவாகச் செலுத்தி துவறங்குறிச்சியில் இறக்கி விட்டார். அங்கிருந்து ஆட்டோ பிடித்து மருத்துவமனை சென்றடைந்தோம். விவரம் தெரிந்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர் வாடகை வாங்க மறுத்தார்(நல்லவர்). குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தையை அட்மிட் செய்துவிடும்படி கூற, என் நண்பன் சிறிதும் யோசிக்காமல் ஒரு ஐநூறு ரூபாய் பணம் (கல்லூரிக்கு செலுத்த வேண்டிய தொகை அது) எடுத்து அந்தப் பெண்ணிற்காக கவுண்டரில் பணம் கட்டச் சென்றான்.

நான் அந்தப் பெண்ணின் திருச்சி வீட்டு முகவரி வாங்கி கொண்டு அவர்கள் வீட்டில் தகவல் சேர்த்து விடுவதாக சொல்லி நானும் என் நண்பனும் கிளம்பினோம்.

திருச்சியில் எங்கள் கல்லூரிக்கு அருகாமையிலேயே அவர்கள் வீடு இருந்ததால் அவர்களிடம் விவரத்தை சொல்லி கல்லூரிகுச் சென்றோம். அவர்களும் எங்களது பெயர் கல்லூரி மற்றும் வீட்டு முகவரி வாங்கிக் கொண்டு அவசரமாக கிளம்பினார்கள்.

மறுநாள் காலை என்னையும் என் நண்பனையும் சிலர் பார்க்க வந்திருப்பதாக பிரின்சிபால் அறையிலிருந்து அழைப்பு வந்தது. அதற்குள் பிரின்சிபால் அவர்களை அழைத்துக்கொண்டு எங்களைத்தேடி வகுப்பறைக்கே வந்து விட்டார். வந்தவர்கள் அந்தப் பெண்ணும் அவரது கணவரும், எங்களைப் பார்த்ததும் கட்டி அழுது சொன்னார்கள் நீங்க இல்லைனா எங்க புள்ள பிழைச்சிருக்காது,எங்களை பொறுத்தவரை நீங்க தான் தம்பி தெய்வம்னு என் நண்பனை அந்தப்பெண் சொன்ன பொது. தொண்டை கணத்து அனைவருக்கும்.

இது ஒருபுறம் இருக்க, அந்த வாரம் விடுப்பில் ஊர் திரும்ப திருச்சியில் பேருந்து எடுத்தோம். பார்த்தால் எங்களையும் அந்தப் பெண்ணையும் நடுவழியில் விட்டுச் சென்ற அதே பேருந்து, ஓட்டுனரும், நடத்துனரும் அவர்களேதான். எங்களை அடையாளம் கண்டு நடத்துநர் கேட்டார் அந்தப் புள்ள பிழச்சிருச்சானு. நாங்கள் ஆமாம் என்றோம்.

அதற்கு அவர் சொன்ன வார்த்தை தான் எங்களை ரொம்ப மணம் நோக வைத்தது. நாங்க தான் சொன்னோம்ல அதுக்கு ஒன்னுமில்லை பிழைசுக்கிடும்னு, நீங்க தான் வயசுக்கோளாறுல அந்தப் பொம்பளப்புள்ளயப் பார்த்ததும் படத்துல் வற்ற ஹீரோ மாதிரி இறங்கிப்போனீங்க என்றார்.

சரி சரி வண்டிகிளம்பும்போது ஏறிக்கிங்க மதுரை மட்டும் தான் சிட்டிங் மத்த ஊரல்லாம் வண்டி கிளம்பும்போது இடம் இருந்தா மட்டும் தான் உட்காரலம்னு சொல்லிக்கொண்டு போனார்.

எப்படி பட்ட உலகத்தில் இருகிறோம் என்று புரிந்தது எங்களுக்கு. கருணையோடு நடந்தால் கூட அதையும் கொச்சைப்படுத்த இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்வார்கள் என்று.

கோவில் சடங்குகளும், சில சங்கடங்களும்.



எங்க ஊர் எல்லையில் எங்க சாதி அமைப்பு வழிபாட்டு முறைக்காக கட்டப்பட்டது தான்(பெயர் குறிப்பிட விருப்பம் இல்லை) அய்யனார் கோவில். (எங்கள் சாதி மட்டுமல்லாது எங்கள் சாமியை குலதெய்வமாக வழிபடும் மற்ற சாதிப்பிரிவினரும் வந்து வழிபடுவதற்காக கட்டப்பட்டது)


பிறகு ஊர்க்காரர்கள் (எங்கள் சாதி அமைப்பினர் மட்டும்) அந்தக் கோவில் பராமரிப்புக்காகவும், சாமிக்கு பூசைகள் தொடர்ந்து செய்வதற்காகவும் சில சட்டங்களை ஏற்படுத்தினர். அதாவது அந்தக் கோவிலுக்கு அதிக நிதி கொடுத்தவருக்கு, கோவிலில் வரும் வருமானத்திலிருந்து (உண்டியலில் சேரும் தொகை தவிர்த்து) எங்கள் ஊரில் (எங்கள் சாதி அமைப்பினர் மட்டும்)எத்தனை தலைக்கட்டு இருக்கிறதோ அத்தனை பங்காகப் பிரித்து அதில் ஒரு குறிப்பிட்ட அளவு பங்கை, நிதி அதிகமாக கொடுத்த குடும்பத்திற்கு குடுத்து விடுவது என்றும், அந்தக் குடும்ப உறுப்பினர்களே அதிகப்படியான நாட்களில் சாமிக்கு பூசை (கோவில் முறை) வைப்பது என்றும் வகுத்துக் கொண்டார்கள்.


மற்ற குடும்பத்தார்கள் பிரிதொறு நாட்களில் சாமிக்கு பூசை(கோவில் முறை) வைப்பது வழக்கம். இது நடப்புத் தலைமுறைக்கு முந்தைய தலைமுறைவரை சரிவர அந்த அந்த காலகட்டங்களில் ஒவ்வொரு வீட்டாரும் அவரவர் முறை வருகிற பொழுதும் தவறாமல் கடைபிடித்தனர். காரணம் போன தலைமுறைவரை எங்கள் ஊரில் யாரும் ஒரு பள்ளிப் படிப்புகூட படிக்கவில்லை என்பதால் ஊரில் உள்ள சொந்த மற்றும் கோவிலிக்குச் சொந்தமான விவசாய நிலங்களில் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தினர். மேலும் போன தலைமுறைகள் வரை ஒரு வீட்டிற்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று அண்ணன் தம்பிகள் இருந்தனர். அதனால் கோவில் முறை வருகிறபோது குடும்பத்தில் ஆண்கள் யாராவது ஒருத்தர்(மற்றவர்கள் வேலை நிமித்தமாக வெளியூர்களில் சென்று இருந்தால் ) அந்த வேலையை (சாமிக்கு செய்யும் பூசையை) செய்து விடுவார்கள்.


ஆனால் இன்றைக்கு வீட்டிற்கு ஒரு பிள்ளை என்று வந்து விட்டது. மேலும் படிப்பறிவு வளர்ந்து விட்டதாலும் விவசாயத்தில் ஆதாயம் குறைந்து விட்ட நிலையிலும், வருமானத்திற்காகவும், வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காகவும், வேலையின் காரணமாக வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் நிலைக்கு பெரும்பாலான குடும்பங்கள் தள்ளப்பட்டு விட்டனர். இதனால் அவர்கள் சாமிக்கு பூசை வைக்கும் முறை வருகிறபோது செய்வதறியாது தவிக்கின்றனர்.



சாமிக்கு செய்யவேண்டியதை செய்யவில்லை என்றால் தனக்கும் தன் குடும்பத்திற்கும் கடவுள் தண்டனை கொடுத்து விடுவார் என்கின்ற பயம் ஒருபக்கம் இருக்க, அதை விட ஊராரின் மிரட்டல்களுக்குதான் அதிகம் பயப்பட வேண்டியிருக்கிறது. அதாவது கோவில் முறை வைக்க தவறினாலோ அல்லது வைக்க நாங்கள் விரும்பவில்லை என்று ஒதுங்கினாலோ, சொந்த ஊருக்கும் உங்களுக்கும் இனி எந்த (சம்)பந்தமும் இல்லை என்று எழுதிகுடுத்து விடவேண்டும் என்று ஊரில் ஒரு சட்டம் இருக்கிறதுக்குப் பயந்து, இன்னைக்கு இருக்கும் அவசர யுகத்தில் தனக்கு என்னைக்கு சாமிக்கு பூசை வைக்கும் முறை வரும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு அந்த நாட்களில் ஊரில் இருக்கும் வசதி குறைந்த பங்காளி குடும்பங்களுக்கு அதிகத்தொகை கொடுத்து சாமிப் பூசைகளை செய்வதென்பது அந்தக் குடும்பங்களுக்கு பெரிய சிரமமாக உள்ளது.



வெளிநாடு அல்லது வெளியூர்களில் இருப்பவர்களுக்கு இப்படிப்பட்ட சடங்குகள் சிரமத்தை குடுக்கிறது. அதனால் சாமிக்கு பூசை வைக்கும் முறையை யாராவது ஒருவரிடம் மாதச் சம்பளமாக அவர் கேட்கும் தொகையை குடுத்துப் பார்க்கச் சொல்லலாம், என்றால் கோவிலில் கிடைக்கும் பெரிய வருமானத்தை வைத்திருக்கும் குடும்பங்கள் இதை ஒத்துக்கொள்வதில்லை. ஆகையால் இந்தச் சிரமங்கள் வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் எங்க ஊர் (சாதி)காரர்களுக்கு இன்றளவும் சிரமமாகத்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்து: காலம்காலமாக கடவுளை நம்பவில்லையென்றாலோ அல்லது கடவுள் நம்பிக்கைக்கு எதிராக பேசினாலோ, நரகத்திற்குப் போவார்கள் என்று சொல்லிச் சொல்லி மனிதனை பயமுறுத்தி வந்ததால் இன்றளவும் மனிதன் கடவுள் நம்பிக்கை சரிதானா? சடங்குகள் சரிதானா? என்பதை ஆராய்வதற்குக்கூட பயப்படுமளவுக்கு அவன் மனதில் கடவுள் பற்றிய பயம் மேலோங்கிவிட்டது.

மேலும் கோவில்கள், கடவுள்கள் என்பது மனிதனை பதுகாப்பதற்காக (வெறும் நம்பிக்கை அளவிலே) உருவாக்கப்பட்டதே. தவிர மனிதன் கடவுளை காப்பதாகவோ, கடவுள் நம்பிக்கை மனிதனை முடக்குவதாக இருக்கக் கூடாது என்பது என் எண்ணம்.