தாலி புனிதமா?


திருமணங்களை திருவிழாவாக நடத்துவது என்பது மகிழ்ச்சியின் வெளிப்பாடு. திருமணத்தின் நோக்கம் சந்ததிகளை உருவாக்குவதுதான் என்று சொன்னாலும், அதன் மற்றொரு நோக்கம், காமம் என்னும் தீய உணைர்வை முறைப்படுத்தி கட்டுக்குள் கொண்டு வருவதே.


இல்லற வாழ்க்கையில் இனையும் ஓர் ஆணையும் பெண்னையும் இனைக்கும் ஒரு பாலமாக இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் தாலியும், கிறிஸ்த்துவர்களுக்கு மோதிரமும் விளங்குகிறது . தாலியோ மோதிரமோ அது ஒரு பெண் திருமணமானவள் என்பதை குறிக்கும் ஒரு அடையாளச்சின்னமே. இந்துத் திருமணங்களில் தாலி கட்டுவது என்பது ஆணாதிக்கத்தையே காட்டுகிறது. ஏனெனில் இந்துத் திருமணங்களில் ஆண், பெண் இருவருக்கும் திருமணம் ஆனதற்கான தனித்தனியான அடையாளச்சின்னங்கள் அணியப்பட்டாலும், பெண் மட்டுமே அதை அவளோ / அவள் கணவனோ இறக்கும் வரை தாங்கிப்பிடிக்க வேண்டும் என்பது நிர்பந்தம். ஆணுக்கு அப்படி எந்த நிர்பந்தமும் இல்லை என்கிறபோது இதை ஆணாதிக்கம் என்று கூறாமல் வேறென்னவென்பது.


தனக்கு எதிரே வரும் பெண் திருமணமானவள் மாற்றான் மனைவி தவறான எண்ணத்தில் பார்க்கக் கூடாது என்பதை அவளை பார்க்கும் ஆண் தெரிந்து கொள்ளவே பெண்ணிற்கு தாலி அணியப்படுகிறது என்று பெரும்பாலானவர் கூறுவர். இங்கே ஒரு விடயம் தெள்ளத் தெளிவாகிறது, எந்த ஒரு ஆணும் தனக்குப் பிடித்த ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்க முடியும், எந்த ஒரு பெண்ணையும் பார்த்து இவள் திருமணமானவளா இல்லையா என்பதை தெரிந்து கொண்டு தன் விருப்பத்தை அந்தப் பெண்ணிடமோ அவளைச் சார்ந்தவர்களிடமோ தெரியப்படுத்தும் உரிமை இருக்கிறது என்பது நிதர்சனம்.

ஆனால் அதே உரிமை பெண்ணிற்கு மறுக்கப்படவே செய்கிறது, காரணம் ஆண் வர்கம் கலாச்சாரம், பெண்ணீயம் என்று பெண்களுக்கு எதிராக ஏற்படுத்தி இருக்கும் கட்டமைப்புகளே.


சரி விடயத்துக்கு வருவோம். தாலி புனிதமானதா?


தாலிகட்டுவதாலே கணவனும் மனைவியும் காலம் காலமாக சேர்ந்து வாழ்கிறார்களா என்றால் என்னைப் பொறுத்து இல்லை என்றே சொல்வேன்.

திருமண பந்தம் நீடிப்பதென்பது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல், பொறுத்துப்போதல், மதித்தல் போன்ற நற்பண்புகளைப் பொறுத்து அமைவது. இதுலே தாலிக்கு எப்படி புனிதம் வந்தது என்றே தெரியவில்லை. பெண்கள் தாலிக்கு பெருமரியாதை தருவதெல்லாம் ஆண் வர்கம் பெண்கள் பற்றி கட்டமைத்து வைத்திருக்கும் கட்டுமானங்களே. எப்படிப்பட்ட கணவனாக இருந்தாலும் அவனை மனைவியானவள் மதித்து / உயர்வாக நினைத்து நடக்க வேண்டும் என்று தாலிக்கு புனிதம் கற்பித்து இருக்கக்கூடும்.


இன்றையச் சூழலிலும் பெண்களுக்கு தாலி கட்டுவது வழக்கமாகவே இருந்து வந்தாலும், படித்த பெண்கள் தாலிக்கு அவ்வளவு முக்கியயத்துவம் கொடுப்பதில்லை. தாலி புனிதம் என்றால் அதை பிறர் பார்க்கும் படி வெளியில் தெரியுமாறு அணிவதில்லை, மாறாக மறைக்கவே விரும்புகின்றனர். வேலைக்குச் செல்லும் பெண்கள் தாங்கள் அணியும் உடைக்கு தாலி பொறுத்தமில்லாமல் இருப்பதாக எண்ணி அதை கழட்டி வைக்கும் பெண்களும் இருக்கவே செய்கிறார்கள்.


எந்தக் காரணத்தினாலோ, தாலியை கழட்டி விட்டால் தன் கணவருக்கு ஆபத்து நேரிடும் என்று சில பெண்கள் மூடத்தனம் கொண்டிருப்பதெல்லாம் தாலி பற்றிய வீன் பெருமைகளையும், புனித்தன்மை கொண்டது என்று சடங்கு சம்பிரதாயங்களில் வாழ்க்கை நடத்தும் ஒரு குறிப்பிட்ட வர்கத்தினரால் பரப்பி விடப்பட்ட புழுகுகளே காரணம்.


பழங்காலத்தில் பதிவுத் திருமணங்கள் அரசமமைப்புச் சட்டங்களில் (மன்னர் காலத்து) இல்லாததால் (ஆண் சமூகம் பெண்னை அடக்கி வைக்க நினைத்த மற்றொரு காரனத்தினாலும்) தாங்கள் திருமணமானவர்கள் என்பதை அவர்கள் சார்ந்த சமூகம் தெரிந்து கொள்ள அணியப்பட்ட இரு அடையாளச் சின்னங்களே தாலி மற்றும் மிஞ்சி.


என்னைப் பொறுத்த வரையில் இன்னும் நூறு ஆண்டுகளில் திருமணம் என்கின்ற அமைப்பு வெறும் பதிவுத்திருமணங்களாகவே இருக்கும். எதிர்கால விரைவு வாழ்க்கையில் யாருக்கும் இன்றைக்கு இருக்கும் நேர அவகாசமோ, சொந்த பந்தங்களில் பினைப்போ இருப்பதற்கு வாய்ப்புகள் குரைவாகவே இருக்கும். அப்படிப்பட்ட சூழல் அமைகிற போது திருமணம் என்பது வெறும் கடமையாக மட்டுமே இருக்கும்.


போன நூற்றாண்டுகளில் திருமணங்கள் மாதக் கணக்கிலும், பிறகு வாரக்கணக்கிலுமாக மாறி இந்த நூற்றாண்டில் ஒரு சிலமணி நேரங்களுக்குள் சுருங்கி விட்டது. அடுத்த நூற்றாண்டில் பதிவுத் திருமணங்கள் கூட அரசாங்கத்தின் கட்டாயத்தால் ஒரு கடமையாகவே நடக்கும் சாத்தியம் உள்ளது.


*******


திருமணங்களை நடத்தி வைக்கும் பிராமனர்கள், சிவாச்சாரிகள் கூட பழைய முறைப்படி தான் திருமணங்கள் நடத்தப்பட வேண்டும், இல்லை என்றால் நாங்கள் அத்தகைய திருமணங்களை நடத்தி வைக்க மாட்டோம் என்று சொல்லுவதில்லை. காரணம் சடங்குகளையும் அதில் கூறப்படும் புனிதங்களையும் யாரும் ஏற்பதற்கில்லை என்பதை தெரிந்து வைத்திருப்பதாலும், யார் எப்படிப் போனாலும் தனக்கு ஜீவனம் நடத்த வருமானம் கிடைப்பதாலும் இவர்கள் பழைய முறப்படி திருமணங்கள் நடத்த வேண்டும் என்று வற்புறுத்துவதில்லை.


பெரும்பாலான சாதியினர் சடங்குகளை, எங்கள் முன்னோர்கள் கடைப்பிடித்தார்கள் நாங்களும் கடைப்பிடிக்கிறோம் என்பார்கள். மற்றொரு காரணம் சடங்குகளைப் பழித்தால் பாவம் வந்து சேரும் என்று சடங்குகளுக்கு புனிதம் கற்பிக்கப்பட்டிருப்பதுமே காரணம். இப்படித்தான் சடங்குகளின் வழி தாலிக்கும் புனிதம் கற்பிக்கப்பட்டிருக்கக் கூடும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. அதைத் தவிர்த்து தாலி புனிதம் என்பதெல்லாம் வெறும் புரட்டுகளே. அடிப்படையாகப் பார்த்தால் தாலி பெண்ணிற்கு பதுகாப்பு என்பதை விட பெண்ணை அடிமைப்படுத்தும் ஆணாதிக்கத்தின் சூழ்ச்சி என்பது தான் உண்மை.