பதிவர்களே ஈழத்து பிரச்சினையில் குளிர்காயாதீர்கள்

இப்படி ஒரு தலைப்பை வைத்ததற்கு பதிவுலக நன்பர்கள் மண்ணிக்கவும்.

சிங்கப்பூர் பதிவர்களின் கவனத்தை ஈர்க்கவே இப்படி ஒருதலைப்பை வைத்தேன். ஈழத்து மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கம் தானே தவிர வேறு உள்நோக்கம் கிடையாது.

நன்பர் ஒருவர் கேட்டார்:

ஈழத்து மக்கள் பற்றியும், பிரபாகரன் பற்றியும் கட்டுறையாக, கவிதையாக பலவாறான செய்திகளை இனையத்தின் (டமிலிஸ்) வாயிலாக நீங்கள் எழுதுவதெல்லாம் எதற்கு?

உங்களுடைய பதிவு நிறைய வாக்குகள் வாங்கி பிரபலமான இடுகைகளின் பட்டியலில் இடம் பெறுவதற்கும், உங்களின் எழுத்துத் திறமைக்கும், சிந்தனைக்கும் மற்றவர் மத்தியில் என்ன மாதிரியான அங்கிகாரம் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவுமே நீங்கள் பரபரப்பான செய்திகளை எழுதுகிறீர்கள் என்றார்.

நான் சொன்னேன்:

அழுகைச்சத்தம் கேட்டாலொழிய இழவு வீடென்பது தெரியாது. பத்துப்பேர் சேர்ந்து சத்தம் போட்டாலொழிய பிரச்சினையின் தீவிரம் புரியாது. எங்களைப் போன்ற பத்துப்பேர் நாங்கள் அறிந்த செய்தியை மற்றவரின் மத்தியில் சென்றடைய வழிவகுக்குறோம். மேலும் எங்களால் எங்கள் அதங்கங்களை இங்கே தான் கொட்டித்தீர்க்க முடிகிறது என்றேன்.

அதற்கு அவர்: கிழித்தீர்கள். பதிவர்கள் நீங்கள் ஆக்கப்பூர்வமாக ஈழத்துப் பிரசினையை கையாலாமல் உங்களின் சொந்த தற்பெருமைக்காக அவர்களைப் பற்றி எழுதிவிட்டு இப்போது சப்பைக்கட்டு கட்டப்பார்க்குறீர்கள் . உண்மையில் உங்களுக்கு ஈழத்துப் பிரச்சினையில் அக்கரையில்லை. அதைப்பற்றி எழுதுவதன் மூலம் உங்களின் எழுத்துக்களால் பலரை வசீகரித்து அவர்களின் செல்வாக்கைப் பெறப்பார்க்குறீர்கள்.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார இல்லையா, இறந்து போன மக்களின் எண்ணிக்கை எவ்வளவு, ஈழத்துப்பிரசினையில் இந்திய மத்திய மாநில அரசின் நிலைப்பாடு என்ன, ஊடகங்களின் ஒருபட்சமான செய்தி என்று இது போன்ற செய்திகளை பரப்புவதன் மூலம் நீங்கள் ஈழத்து மக்களுக்கு செய்வது என்ன?

ஒன்றுமில்லை.

மேலும் நீங்கள் ஒன்றும் போர்களத்திற்குச் சென்று பார்வையிட்டு வந்து எழுதவில்லையே, ஊடகங்களின் வாயிலாக தெரிந்ததைத்தானே எழுதுகிறீர்கள். தெரிந்ததை எழுதுவதால் என்ன பயன்?

உங்களை நான் கேட்பதெல்லாம் இதுதான்.

அவர்களுக்கு கடமையாற்ற உங்கள் கரங்கள் நீள வேண்டாம். அவர்கள் கண்ணீர் துடைக்க உங்கள் விரல்கள் நீட்டுங்கள்.

அங்கே குழந்தைகள் பாலுக்காகவும், பெரியவர்கள் ஆறுதலுக்காகவும், காயம்பட்டவர்கள் மருத்துவ உதவிக்காகவும் துடித்துக் கொண்டிருக்கையில், நீங்கள் செய்தித்தாளிலும், வானொளியிலும், இனையத்திலும், தொலைக்காட்சியிலும் வரும் ஈழத்து மக்களின் அவலங்கலைப் பார்த்து இன்றைக்கு எனக்கு சோறு கூட இறங்க மாட்டேங்குதுன்னு ஒரு பதிவு எழுதிவிட்டு அடுத்த நாள் பதிவிற்காக அதே ஊடகங்களின் வாயை பார்த்துகொண்டிருக்கிறீர்கள்.

சோறு கிடைத்தால் காக்கை தன் சுற்றத்தையே அழைத்துக் கொண்டு வருகிறது. ஒரு காக்கை இறந்துவிட்டல் இருநூறு காக்கைகள் சூழ்ந்து கொள்கின்றன. நாமெல்லாம் ஆறறிவு படைத்த மனிதர்கள். ஆகையால் நன்பரே உங்களுடைய அடுத்த பதிவர் சந்திபிலாவது ஈழத்து மக்களின் துயரத்தை துடைக்கும் படியான திட்டங்களையோ அல்லது உதவிகளையோ கொண்டுவருவோம் என்று முடிவெடுங்கள் என்றார்.

அவர் விடைபெற்றுப் போகையில் ”மனிதன் வயிற்றுக்குப் பசி தெரியும் வரை மனத்துக்கு உறவு தெரிகிறது. அது அவன் குற்றமல்ல இயர்க்கையின் குற்றம். இயற்கை வயிற்றில் பசியை வைத்தது பசி தேவையைத் வைத்தது தேவை தன்னலத்தை வளர்த்தது தன்னலம் எல்லைகளை படைத்தது. எல்லை, உனர்ச்சிகளையும் தனக்குள் அடக்கிக் கொண்டது. உணர்ச்சிகளுக்கு ஆட்பட்ட உறவு, ஊரை கூடக்கருதாமல் வீட்டுக்குள் முடங்கி விட்டது. வீட்டிலிருந்து ஊருக்கும், ஊரிலிருந்து நாட்டுக்கும் உறவு தன் முழுக்கரங்களையும் எப்போது விரிக்கும் என்று முனுமுனுத்துக் கொண்டு போனது காதில் விழுந்தது”.

அவர் பேச்சிலிருந்து நான் எடுத்துக்கொண்டது, எழுதுவதால் ஈழத்துப் பிரச்சினை உலகைச் சென்றடையும் தான் இல்லையென்று சொல்லவில்லை. தற்பொழுது போர் முடிந்து விட்டது இனியும் எழுதுவதைவிட ஆக்கப்பூர்வமாக எதாவது நம் இனத்துக்கு செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.

சிங்கப்பூர் பதிவுலக நன்பர்களே நம் அடுத்த சந்திப்பை இப்பொழுதே கூட்டி ஆவன செய்வோம். வாருங்கள்.