வண்டியிழுக்கும் எருது, அதிகச் சுமை வண்டியில் ஏற்றப்படும் பொழுது வாயில் நுறைதள்ள, மூச்சிறைக்க, கண்ணீர் வழிய திணறி இழுக்குமே தவிர தனக்கு ஏன் வலிக்கிறது, நான் ஏன் இச்சிரமத்துக்கு ஆளானேன் என்று சிந்திக்காது. காரணம் இயற்கை அதன் தன்மையை அப்படி நிர்ணயம் செய்து வைத்திருக்கிறது.
ஆனால் சிந்திக்கும் திறன் கொண்ட மனிதன், தனக்கு வரும் துன்பங்களை ஆராய்ந்து அதில் இருந்து விடுபட அல்லது அதன் காரணங்களையாவது தெரிந்து கொள்ளமுடியும். ஆனால் அப்படிச் செய்யாமல் சிந்திக்க மறுத்தோ, அவகாசம் இல்லாமையாலோ அந்தப் பொறுப்பை வேறொரு இடத்தில் ஒப்படைக்க நினைப்பதும், அந்தப் பொறுப்பை ஏற்பவர் கடவுள் என்று நம்புவதும் நகைப்புக்கு இடமளிக்கிறது.
இறை என்ற ஒன்றை நம்புகின்ற பொழுது நேரடிப் பலன் கிடைக்கிறதோ இல்லையோ, உளவியல் ரீதியான பிரச்சினைகளுக்கு ஒரு தற்காலிக தீர்வாக மட்டுமே அது இருக்கும். வருகிற துன்பம் எத்தகையதாயினும் அதை நீங்களே அனுபவம் செய்கிறீர்கள். இதில் கடவுள் பங்கு என்று எதைச் சொல்வது.
துன்பம் வருகிற போதுதான் கடவுளையே நீங்கள் அறிந்து கொள்ள முடியும் (குந்தி மஹாபாரதத்தில் கண்ணனிடம் சொன்னது, மேலும் துன்பங்களைத் தந்து எப்பொழுதும் கண்ணனையே நினைக்கும்படி வரம் தரும்படியும் கண்ணனைக் கேட்டதாகக் கதை சொல்கிறது) என்ற வாசகத்தைப் படிக்கிற போது எனக்குச் சிரிப்புத் தான் வரும். துன்பத்தைக் கொடுத்துத் தான் தன் இருப்பை நிரூபிக்கும் இறைவனை விட நான் இவ்வுலகத்தின் அணைத்து இன்பத்தையும் தருகிறேன் என்னைப் பணிவாயா என இயேசுவைக் கேட்ட சாத்தான் இறைவனை விட மேலானது என்று நான் நினைக்கிறேன்.
நீ எங்கள் கடவுளை மறுக்கிறாய், நிந்திக்கிறாய் என்கிறீர்களா? நான் அப்படி ஒன்று இருக்கிறதா இல்லையா என்று தெரியாதவன். நான் கேள்விகேட்டாள் நான் நிந்திக்கிறேன் என்று எடுத்துக் கொள்வீர்களா?
நீங்கள் இறையை ஏற்பவர்கள்தானே? உங்கள் கடவுள் உங்களை சோதிக்கிற போது, அதை ஏன் அப்படியே அது அவன் செயல் என்று ஏற்க மறுக்கிறீர்கள். உதாரணமாக உங்களுக்கு நோய் வந்தால் அதுவும் இறைவன் செயல்தானே, அதை அப்படியே அதன் போக்கில் விட்டு விடாமல் அதற்கு எதிராக செயலாற்றி உங்களை அந்த நோயில் இருந்து விடுபட முயற்சிப்பதென்பது, நீங்கள் கடவுளின் செயலை எதிர்க்கிறீர்கள் அல்லது கடவுள் இல்லை என்று எதிர்வினையாற்றி நிரூபிக்கிறீர்கள்.
இது நீங்கள் இயற்கையையும் இறைவனையும் ஒன்றாக நினைப்பதன் விளைவே. இயற்கையும் இறைவனும் ஒன்றாக இருக்கவே முடியாது. இயற்கை இறைவனுக்கு கட்டுப்பட்டதாக நான் நினைக்கவில்லை, மாறாக நீங்கள் குறிப்பிடும் இறைவனானவர் இயற்கைக்கு கட்டுப்பட்டவராகவே இருக்க முடியும். வேண்டுமென்றால் இப்படி வைத்துக்கொள்ளலாம், இயற்கையும் இறைவனும் அவனே, கடவுளும் சாத்தானும் அவனே, ஆழிலைக் கண்ணனும் அரக்கனும் அவனே என்று ஏற்றுக் கொள்கிறபோது, எது நடந்தாலும் அது அவன் செயல் என்று திருப்திப் பட்டுக்கொள்ளலாம்.
ஆனால் அப்படி ஏற்கிறபோது அனைத்து மதங்களும் கட்டமைத்து வைத்திருக்கும் இறைவன் மிகவும் நல்லவன் என்ற நம்பிக்கையில் பாதிப்புவரும்.காரணம் துன்பத்தில் இருந்து விடுதலை அழிப்பவரே தேவைப்பட்டால் இயற்கை சீற்றங்களின் மூலியமாக பலரை கொல்லுவார் என்றும் ஏற்கிறபோது அது மதங்கள் கட்டமைத்து வைத்திருக்கும் கடவுள் பெயருக்கு இழுக்குத்தானே.
இங்கே பிரச்சினையே மதங்கள் ஏற்படுத்தி இருக்கும் கடவுள் கோட்பாடுகளே காரணமென நினைக்கிறேன். நடக்கின்ற நல்லதுக்கெல்லாம் கடவுளின் செயலென்றும் கெட்டதுக்கெல்லாம் சாத்தான் என்றும் கிறித்துவ மதம் சொல்கிறது. கர்த்தரே உலகைப் படைத்தார் என்று வைத்துக் கொண்டாலும் சாத்தானையும் சேர்த்தே படைத்தாரா? இல்லை சாத்தானும் கடவுள் போல் தான் தோன்றியா என்ற கேள்வி எழவே செய்கிறது.
முற்பிறவியில் செய்த பாவ புண்ணியத்திற்கேற்ப தண்டனையும் பலனையும் தருபவர் ஏதோ ஒரு இந்துக் கடவுள் என்றால், பாவமும் புண்ணியமும் மனிதர்கள் செய்கிற போது அவர்களை படைத்த படைப்பாளியான கடவுளுக்குத் தானே பலனும், தண்டனையும் போய்ச் சேரவேண்டும்?.
அதை விடுத்து இது கலிகாலம், மனிதர்கள் பாவம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் அவர்களை அழித்து மீண்டும் உலகத்தை படைக்கப் போகிறார் என்றும், பைபிளில் கூறப்பட்டுள்ள படி கர்த்தரே உலகையும் அதில் மனிதர்களையும் படைத்து பிறகு மாமிசமான மனிதன் தவறு செய்ய ஆரம்பித்து விட்டதால் அவர்களை அழித்து மீண்டும் ஒரு உலகைப் படைத்தார் என்பதையும் ஏற்பதற்கில்லை. ஏனெனில் இதில் அடிப்படையாக பார்த்தால் படைப்பே தவறாக இருப்பதால் தானே மனிதர்கள் தவறு செய்ய நேரிடுகிறது. இது தன்னால் நிகழ்ந்த தவறு தானே என்ற உணரக்கூடிய பொது அறிவுகூட இல்லாதவரா உங்கள் கடவுள் என்று கேட்கத்தோன்றுகிறது.
ஈராயிறத்துப் பணிரெண்டில் உலகம் அழியும் என சொல்லி வருகிறார்கள். பைபிள்படி நல்லவர்களான நோவாவும் அவர் குடும்பத்தினரையும் தவிர்த்து மற்ற எல்லோரையும் கர்த்தர் அழித்துவிட்டார் என்றே வைத்துக் கொண்டால், இன்றைக்கு இருக்கும் உலக மக்கள் அனைவரும் நல்லவர்களான நோவா குடும்பத்தவர்களே என்கிற போது எல்லோரும் தவறு செய்ய நேரிட்டது எப்படி?
நம்புங்கள் நடக்கும், கேளுங்கள் கொடுக்கப்படும் என்கின்ற கடவுள் கோட்பாடுகளை சந்தேகமாகக் கேள்வி கேட்டாள் நான் நாத்திகனாம். முதலில் அதைச் சொல்ல (மதவாதி) உங்களுக்கு என்ன யோக்கிதை இருக்கிறது. இஸ்லாத்தில் எல்லாம் வல்ல இறைவனே (அல்லா) உலகைப் படைத்தார் என்கிறது, கிறிஸ்துவர்களுக்கு கர்த்தரே உலகைப் படைத்தார், நீங்கள் கிறிஸ்துவாகப் பிறப்பதற்கும், இஸ்லாமியராகப் பிறப்பதற்கும் ஏற்கனவே இந்துக் கடவுள் விதி எழுதிவிட்டார் என்கிறது இந்து மதம்.
இதில் எந்த மதத்தினரும் அடுத்த மதத்தினரின் கடவுள் கொள்கைகளையோ கட்டமைப்புகளையோ ஏற்க மாட்டார்கள். ஆக கோவியார் சொன்னது போல் ஒவ்வொரு மதத்தினரும் அடுத்த மதத்தினருக்கு அவர்கள் கடவுள் பெயராலும் கட்டமைப்பாளும் நாத்த்கரே.
வெறும் தன்னலம் கருதியே பக்தியாளர்களாக இருந்து கொண்டு தங்களை ஆண்மீகவாதிகள் என்றும் ஆண்மீகம் பேசுபவர்கள் என்போர் அவர்களை அவர்களே சீர்தூக்கிப்பார்த்துக் கொள்வது நல்லது. இறை அச்சம் அல்லது சொர்கம் பற்றிய கணவில் நல்லவர்களாக இருப்பவர்களைவிட இப்படிப்பட்ட எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தனக்கு எதல்லாம் துன்பமோ அதை மற்றவர்களுக்குச் செய்யாமலும் கடவுள், மத, சாதி பேரைச் சொல்லி சக மனிதனிடம் ஏற்றத் தாழ்வு பாராட்டாமல் கடவுளை மற மனிதனை நினை என்று வலியுறுத்தும் நாத்திகனே ஆத்திகனைவிட மேலானவன்.
எத்தனை எத்தனை மதங்களடா?
அதில் எத்தனை எத்தனை கடவுளடா?
எத்தனை எத்தனை கொள்கைகளடா?
அனைத்திலும் அடிப்படைக் கொள்கை என்றாலோ
அடுத்த மதத்தினரை அழிப்பதுதானோடா?
(இல்லாத) கடவுளே உங்களைக் கேட்பதெல்லாம் இதுதான், இனி ஒரு அவதாரம் வேண்டாம், இன்னுமொறு மதத்தை பூமி தாங்காது.