இங்கே நான் கொஞ்சம் முரன்படுகிறேன்.
ஆசைப்படுவதை விட்டு விட ஆசைப்படுவதென்பது எப்பொழுதும் நிறைவேறாத ஆசையாகவே தான் இருக்கும். ஆசை இருப்பதால்தான் உயிர்கள் அனைத்திற்கும் வளரனும்கிற நோக்கம், வாழனும்கிற நோக்கம் வருகிறது. பறக்க வேண்டும் என்று மனிதன் ஆசை பட்டதாலேயே அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டது. இறைவனை காண வேண்டும் என்ற ஆசை இருப்பதாலேயே ஆண்மீகம் வளர்ச்சி கண்டது. ஆசை என்பது இல்லை என்றால் உயிரினங்களின் இயக்கம் நின்று போயிருக்கும்.
வாழ்க்கையில் துன்பம் ஆசைப்படுவதால் வருகிறது, அதுனாலயே ஆசைப்படுவதை விட்டு விடுங்கள் என்று சொன்னதன் நோக்கம் சற்று உற்று ஆராய்ந்து பார்த்தோமானால், ஆசையின் நோக்கம் மனதிற்கு மகிழ்ச்சி கொண்டுவருவதே, ஆனால் நாம் நம் மனதின் மகிழ்ச்சிக்கான தூண்டுதலை நாம் நமக்குள்ளேயே தேடாமல், அது வெளிச்சூழ்நிலை கொண்டு தீர்மானிக்கும் வகையில் நாம் நம் ஆசையை வளர்த்துக் கொண்டதாலேயே பெரும்பாலானவர்களுக்கு மகிழ்ச்சி கிட்டுவதில்லை.
எப்பொழுது மனதிற்கு ஆசையினால் கஷ்டம் வருகிறது என்று யோசித்தால், நமது ஆசை பொருள் நோக்கத்தில் போகும் பொழுது தான். ஏனெனில் பொருள் நோக்கத்தில் ஆசை போகும் பட்சத்தில் அது நிறைவேறுவதற்கான சாத்தியம் கிடையாது.
எப்படி?
உங்கள் அண்டைவீட்டுக்காரர் மாதம் லகரம் சம்பளம் வாங்குகிறார் என்றால் உங்கள் மனைவிக்கு நீங்கள் அவரைவிட ஒரு ரூபாய் அதிகம் சம்பளமாக
வாங்கினால் தான் மகிழ்ச்சி, அவர் ஆசையை பூர்த்தி செய்வதில் தான் உங்கள் மகிழ்ச்சி இருக்கிறது என்று முடிவு செய்துவிட்டீர்கள் என்று வைத்துக்குவோம். நீங்கள் பொருள் ஈட்டுவதில் அவரை விட பின்தங்கிப்போனால் நீங்கள் தொன்னூறு ஆயிரம் சம்பாதித்தும் மகிழ்ச்சி இருக்காது, மாறாக மனதுக்கு வருத்தம் தான் வரும்.
சரி, அவரை விட உங்கள் மனைவி ஆசைப்பட்டதுபோல சம்பாதிதுவிட்டால் உங்கள் இருவரின் ஆசையும் முற்றுப் பெற்றுவிட்டதா என்றால் இல்லை, அது அடுத்த நிலைக்கு தாவிவிடுகிறது. இப்படி பொருள் நோக்கத்தில் வருகிற ஆசை முழுமை பெறுவதில்லை.ஆசையின் நோக்கம் என்பது விரிவடைய வேண்டும் என்பதே. எது ஒன்றை ஆசைக்கு எல்லை என்று வகுக்கிறோமோ அதை உடைத்துக்கொண்டு வெளியே வரவேண்டும் என்பதே ஆசையின் இயல்பு.
உங்கள் ஆசை அல்லது தேடல் என்பது பணமாக இருக்கட்டும், பொருளாக இருக்கட்டும், புகழாக இருக்கட்டும், கடவுளை காண்பதாக இருக்கட்டும் எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கட்டும் அடிப்படையாகப் பார்த்தால் உங்களது ஆசை என்பது சந்தோஷத்தின் தேடலில் தான் இருக்கிறது.
மனம் ஆசையை உருவாக்குகிறது. அந்த ஆசை நிறைவேறிவிட்டால் மகிழ்ச்சிப் படுவதும், நிறைவேறாவிட்டால் துக்கப்படுவதும் நம் கையில் தான் இருக்கிறது. ஆசைகள் நிறைவேறாத பட்சத்தில் அதை ஒரு பெரிய தோல்வியாக, ஏமாற்றமாக, இழப்பாக, வேதனையாக எடுத்துக்கொள்ளாமல் எந்தச் சூழ்நிலையிலும் நாம் நம் மனதை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்போமேயானால், இன்பம் துன்பம் இரண்டையும் சமமாக பார்க்கும் மனநிலை, மனோபாவம் நம்மிடம் இருக்குமேயானால், ஆசைப் படுவதால் எந்தப் பாதிப்பும் இல்லை, ஆசையை விட்டு விட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. எது உங்கள் மனதுக்கு பெரிய ஆசை என்று படுகிறதோ அதையே நீங்கள் வைத்துக்கொள்ளலாம்.
அதனால் அத்தனைக்கும் ஆசைப்படுங்கள், உங்கள் ஆசை என்பது உங்கள் மகிழ்ச்சி சார்ந்ததாக இல்லாமல் மற்றவருக்கும் அது மகிழ்ச்சி தரும் பட்சத்தில் உங்களது எந்த ஆசையும் ஞாயமானதே என்பதே என் கருத்து.