”இந்து தர்மப்படி கருணைக் கொலை செய்வது பாவம், குற்றமாகும். “ எப்படிப்பட்டவரும் வாழ வேண்டும்’ என்கிறது இந்து மதம். அதனாலேயே தற்கொலை செய்து கொள்வதையும், கருணைக் கொலை செய்வதையும் ஒப்புக் கொள்வதில்லை இந்து மதம்.
எந்த காரணத்தினாலோ இழிநிலை அடைந்தவரிடமும் இரக்கப்படவேண்டும் என்றும், அப்படிப்பட்டவருக்கு தொண்டு புரிவதே புண்ணியம் என்கிறது இந்து மதம். இவ்வுலகில் எவருக்கும் அவரவர் விரும்பியபடி வாழ்க்கை அமைந்துவிடுவதில்லை, அது ஒவ்வொருவருக்கும் அவரவர் வினைப்படி வந்து அமைகிறது. அப்படி அவரவர் பாவ புண்ணியத்திற்கேற்ப துன்பங்கள் வருவதாகவும், அந்தத் துன்பங்களை எந்த நிலையிலும் அனுபவித்து இயற்கையாக இறக்கும் போது வந்த பாவவினை கரைந்து நிரந்திரமான நல்வாழ்க்கை அமைகிறது என்கிறது இந்துமதம்.
ஒருவர் துக்கப்படுகையில் அவர் அந்த துக்கத்தைத் தாங்குமளவுக்கு இதமளிக்கும் உதவியை இரக்கத்தால் பிறர் செய்வது நல்லவினை என்றும் அப்படிச் செய்பவருக்கு நலம் தரும் என்கிறது இந்துக்களின்(நம்முடைய) தர்மம். அதுவே மனித நேயமென்கிறது.
( மனிதனைப் படைத்தது கடவுள் என்றால் கடவுள் படைக்கையிலேயே எல்லோருக்கும் நல்ல சிந்தனையைத் தந்து படைத்து இருக்கலாம், சரி படைக்கும் போதுதான் தப்பு நடந்து விட்டது என்று வைதுக்கொள்வோம் மனிதன் தப்பு செய்கின்ற போது தடுத்து நிறுத்துவதை விட்டு வேடிக்கை பார்த்துக் இருந்து விட்டு, தப்பு நடந்து முடிந்தபின் தண்டனை கொடுப்பேன் என்று கடவுள் சொன்னால், இங்கே கடவுள் தத்துவத்திற்கும் , மனிதத்துவதிற்கும் வித்தியாசம் இல்லாமல் போகிறது. மனிதன் தான் சட்டம் என்ற சாட்டையால் நடந்த தப்புக்கு காரணகர்தாக்களை விட்டு விட்டு காரணத்தை தண்டிக்கிறான். எதுதப்பு எது சரின்னு உனக்கு உணர்த்தத்தான் எங்கள் கடவுள் உனக்கு அறிவை கொடுத்து இருக்கிறார் என்குறீர்களா, நடப்பதெல்லாம் விதிப்படி நடக்கிறது என்று நீங்கள் தான் சொல்குறீர்கள். அப்போ இங்கே தப்பு நான் செய்யவில்லை எனக்கான விதியை எழுதிய கடவுள் தப்பு செய்கிறார் என்று தானே பொருள். சரி இந்த உலகத்தில் பிறந்த எல்லா உயிரும் அவனே அதனால் அவனுக்கு அவனே தண்டனை கொடுத்துகொள்கிறான் என்குறீர்களா, அப்படியே வைதுக்கொள்வோம் ஆனால் தண்டனை அனுபவிக்கும் பொழுது கடவுளுக்கு வழித்தால் சரி ஆனால் இங்கே எனக்கு வழிக்கிறதே. சரி விடுங்கள் ரொம்ப ஆழமாக கடவுளைப்பற்றி ஆராய வேண்டாம்)
ஒருவர் அனுபவிக்க வேண்டிய துக்கம் வேறு எவராலும், எந்த வகையிலும் தடுத்து நிறுத்திவிடக் கூடியதன்று என்று நம்புகிறது இந்து மதம். உயிர்கள் எல்லாம் ‘வாழ வேண்டும்’ என்ற வேட்கையில் உடலைத் தாங்க உலகில் வந்துள்ளன. வாழ வேண்டும் என்ற துடிப்பை உள்ளில் கொண்டே சுவாசிக்கின்றன, உணவு உண்ணுகின்றன, இனவிருத்தி செய்கின்றன, வளருகின்றன.
அதனால் உடலில் வந்துள்ள எல்லா உயிருக்குமே உலகில் வாழ உரிமை இருக்கிறது, எதனுடைய வாழ்வையும் தடுக்கவோ, அழிக்கவோ எவருக்கும் உரிமை இல்லை என்றும், அப்படித் தடுப்பதும், அழிப்பதும் பாவம் என்றே பண்பும், நாகரிகமும் வகுத்துவைகப்பட்டுள்ளதாக இந்து மதம் கூறுகிறது.”
”கருணைக் கொலை செய்யப்பட்ட நபர், தன்னுடைய பாவ வினையைத் தீர்க்காமல் மறித்துக்கொள்வதால் அவர் அந்தத் துன்பத்திலிருந்து தப்பித்து விடுவதில்லை என்றும், அவர் அந்தப் பாவத்தின் முழு பலனையும் கரைக்கும் வரை அவர் பிறப்பெடுப்பார் என்றும் கூறுகிறது இந்து மதம். அதனாலேயே இறப்பிற்குப் பின்னால் பாவ புண்ணியம் தொடரும் என்றும் சொல்லிவைத்தது.
(பற்றித் தொடரும் மிருவினை பாவபுன்னியமுமே என்றார் பட்டினத்தார்).
இங்கே நான் கொஞ்சம் முரண்படுகிறேன்.
வேதனையுடன் உயிர் வாழ்வதைவிட நிம்மதியாக ஒருவனைச் சாகச் செய்து விடுவது மேல் என்பதே கருணைக்கொலையின் நோக்கம். ஒருவன் சகிக்க முடியாத துன்பத்தில் துடிப்பது, அவனுக்கும் அவனைச் சார்ந்தவர்களுக்கும் துயரமே. (உதாரனமாக கோமா மற்றும் பக்கவாதத்தில் அவதிப்படுபவர்கள்).
ஒருவர் கோமா நிலையில் இருக்கிறார் என்றால் அவருக்கு தனக்கு என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளமுடியாது , ஆனால் பக்கவாதத்தால் ஒருவர் அவதிப்படுகிறார் என்றால் அவருக்கு நோயின் கடுமை புரியும், வாய் பேச இயலாமலும், இயற்க்கை உபாதைகளைக் கழிக்கக் கூட இன்னொருவர் உதவியை இறக்கும் வரை நாட வேண்டி இருக்கிறது. அதனால் கோமாவில் ஒருவர் பலகாலமாக அவதிப்படுகிறார் என்றால் அவரைக் கேட்காமலும், அதே போல் பக்கவாதத்தில் பலகாலமாக அவதிப்படும் ஒருவர் தன்னால் மேலும் நோயில் அவதிப்பட முடியாது என்னை கருணைக் கொலை செய்துவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டால், அதில் ஞாயம் இருந்தால் அவர் விருப்பப்படி அவரை கருணைக் கொலை செய்வது பாவமாகதென்று நினைக்கிறேன்).
(கோமாவில் இருப்பவர் எந்த நேரத்திலும் குணமடயமுடியும் அவரைக் கொள்வதற்கு நீங்கள் யார் என்று கேட்பது எனக்கு கேட்கிறது. நான் இன்றைக்கு இருக்கும் மனிதனின் அவசர வாழ்க்கையை மனதில் கொண்டு அப்படிச் சொன்னேன். மேலும் அப்படிப்பட்ட ஒருவரை நீங்கள் உடன் இருந்து அவர் குணம் அடையும் வரை அல்லது அவர் இறக்கும் வரை பார்த்துக்கொள்வேன் என்று சொன்னால் நீங்கள் தான் அவரைப்பொருத்தவரை கடவுள். மனிதநேயம் உங்களிடம் மிச்சம் இருக்கிறது என்று தெரிகிறது)
( பவம் புன்னியம் என்பதெல்லம் அவரவர் மனசு சார்ந்த விசயங்கள். ஒருவருக்கு பாவமாக தெரிவது இன்னொருவருக்கு பாவமாகத்தெரியாது. மேலும் மனிதனை நெறிப்படுத்துவதற்காகவும், வாழ்க்கை முறையை சீர்படுத்துவதற்காகவும், வலுத்தவன் இளைத்தவனை வதைக்காமலும், இழிந்தவர்மேல் இரக்கம் கொள்ளச் செய்வதற்காகவும் பெரியோர்களால் சொல்லிவைக்கப்பட்டதே பாவ புண்ணியமென்று நினைக்கிறேன்)