கனாக்காலங்கள்

டீச்சர் இந்த பாய் (BOY)என்னை அடிக்கிறான், இல்ல டீச்சர் இந்தப் பிள்ளை தான் என்ன முதல்ல கிள்ளினுச்சுன்னு ஒருத்தர ஒருத்தர் புகார் சொல்லிக்கொண்டு கைகோர்த்து வளர்ந்த பழைய நண்பர்கள், பள்ளி ஆசிரியர், ஆசிரியை பற்றி எழுதும் தொடர்பதிவு. தொடர் பதிவுக்கு என்னை அழைத்த நண்பர் ‘அப்பாவி முரு’ அவருக்கு என் நன்றி.

நான் படித்தது மெட்ரிக்குலேசன் பள்ளி என்பதால். என்னுடைய பள்ளிப் படிப்பை மூன்று வயதில் தொடங்கியவன் நான்.

எல்கேஜி வகுப்பு: முதல் நாள் சீறுடை(வெள்ளை நிற சட்டை, சிகப்பு நிற கால் சட்டை, டை, சூ )அனிந்து அம்மாவிற்கு டாடா காட்டி சென்ற ஞாபகம். எங்களுக்கு இரண்டு வருக்கி ரொட்டியும் சில விளையாட்டு பொருட்கள் தந்து விளையாட்டு காட்டிய ’எல்கெஜி’ வகுப்பாசிரியை பொன்ராஜம். பள்ளி ஆரம்பித்து ஒர் இரு நாள் கழித்து அட்மிசன் கிடச்சு பள்ளியில் சேரும் மாணவர்கள் சக மாணவர்களுக்கு மிட்டாய் கொடுத்து அறிமுகம் செய்து கொள்வது எங்கள் பள்ளியில் வழக்கம். அப்படி சேர்ந்த ஒருமாணவர் மிட்டாய் எல்லோருக்கும் கொடுக்க , நான் மட்டும் கைநிறைய அள்ள எங்கள் இருவருக்கும் சண்டை மூண்டு நான் அவனை கிழே தள்ளியபின் தான் தெரிந்தது பொன்ராஜம் டீச்சர் எவ்வளவு கண்டிப்பானவர் என்று.

யுகெஜி வகுப்பு: ’யுகேஜி’யும் எல்கேஜி போல அரை நேர படிப்புதான் என்ன ஒரு வித்தியாசம் எல்கேஜியில் வர்க்கி ரொட்டி, யுகேஜி யில் ’பன்’. எனக்கு கொடுக்க பட்ட பன்னின் அடிப்பாகம் கருப்பாக இருக்க, பக்கத்து இருக்கையில் இருந்த மாணவனின் பன்னை பிடுங்கித்திங்க, இந்த முறை என்னை அடித்த வகுப்பாசிரியை பாமா.

முதல் வகுப்பு: கருப்பாடு, வெள்ளை ஆடு , மற்றும் கோடாளியும் தேவதையும் கதை சொல்லித்தந்தவர் பொன்ராஜம் டீச்சர் தான். நான் பள்ளி இறுதி ஆண்டு முடிக்கும் வரை எனக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் பொன்ராஜம் டீச்சர் தான்.

2ம் வகுப்பு~ 3ம் வகுப்பு: ஹெப்சிபா வின்செண்ட் டீச்சர். இவர் கதோலிக்க மதத்தைச் சேர்ந்தவர். ரொம்ப அன்பானவர். நான் எனது வகுப்பில் (7ம் வகுப்பு வரை) எப்பொழுதும் முதல் ராங்க் வாங்குவதால் இவருக்கு என்னை மிகவும் பிடிக்கும். இவர் நான் ஒருமுறை கணக்கில் நூறுக்கு இரண்டு மதிபெண் குறைவாக வாங்கியதால் இவரும் என்னை ஒருமுறை அடித்த ஞாபகம்.

4ம் வகுப்பு: சரியா ஞாபகம் இல்லை.

5ம் வகுப்பு: இந்த முறை வகுப்பாசிரியையாக வந்தவர் பள்ளி துணை தலைமை ஆசிரியை பிரபாவதி. இவர் எனக்கு அறிவியல் வகுப்பு எடுத்தார். ஒருமுறை தேர்வில் நான் எல்லாக் கேள்விக்கும் பதில் அளித்தும் எனக்கு மதிப்பெண் குறைவாக கொடுக்கப் பட்டிருந்தது கண்டு பிரபாவதி டீச்சரிடம் கேட்டேன். எல்லாம் சரியாகத்தான் போட்டிருக்குன்னு எனக்கு மதிப்பெண் குடுக்க மறுக்க, நீங்கள் எனக்கு மதிப்பெண் தரலைனா நான் எங்க அப்பாவிடம் (அப்பாவியிடம் இல்லை) சொல்வேன் என்று சொல்ல, டீச்சர் என்னை உண்டு இல்லை என்று செய்து விட்டார்.

மறுநாள் எங்கப்பா ஆஜர், விவாதம் கடுமையாக நடந்து எனக்கு தலைமை ஆசிரியர்(மஹாதேவன் இவர் மட்டும் தான் ஆசிரியர்) முன்னிலையில் எனக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது.

அதன் பின் ராங்க் கார்ட் கொடுக்கப்பட்டது, அப்பொழுது இன்னொரு விபரீதம் நடந்தது, எனக்கும் சுதா என்ற ஐயர் வீட்டுப் பெண்ணிற்கும் படிப்பில் போட்டியாக இருக்கும். அவள் எப்பொழுதும் இரண்டாம் இடம் தான் வருவாள்,
இந்த முறை அவள் தான் முதல் ராங்க் என்று எதிர்பார்தவளுக்கு ஏமாற்றம், நான் இழந்த மதிப்பெண்னை பெற்று முதலிடம் பிடிக்க கடுப்பாகிப் போனவள் என் கண்ணத்தை கடித்து என் ராங் கார்டையும் கிழிக்க மறுநாளும் எங்கப்பா பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் சாமியாடிவிட்டு போன ஞாபகம்.

எனக்கு பள்ளி ஆசிரியைகளை விட டியுசன் டீச்சர் சந்திராவிடம் தான் பயம் அதிகம். ஒரு நாள் அவரிடம் படித்துக் கொண்டிருக்கையில் சிறுநீர் அடிவயிற்றை முட்ட நான் டீச்சரிடம் கேட்க பயந்து நான் இருந்த இடத்திலேயே கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீர் கழிக்க, டீச்சர் காதுக்கு விசயம் எட்டியது. டீச்சருக்கு கெட்ட நேரம் போல, என்னை வெளியே போக அனுமதிக்காமல் என்னை அடித்தது தான் தாமதம் அடக்கி வைத்திருந்த மிச்ச சொச்சத்தையும் டீச்சரின் வீட்டிற்குள்ளேயே இறக்கி முடித்ததேன்.

இன்றைக்கும் என் நண்பர்கள் இந்த விசயத்தைச் சொல்லி நான் ஒரு பயந்தாங்கொள்ளி என்று கிண்டலடிப்பது உண்டு. இப்படி நிறைய இருக்கு. உங்களுக்காக கொஞ்சூண்டு மட்டும் இங்கே பகிர்ந்து கொண்டேன்.

நான் அன்றைக்கு நன்றாகப் படித்ததால் இன்றைக்கும் என்னை நினைவில் வைத்துப் பெயர் முதற்கொண்டு மறக்காமல் என்னை எல்லா ஆசிரியையும் நலன் விசாரிப்பது மனதுக்கு மகிழ்சியாக் இருக்கு.

தொடரைத் தொடர நான் விரும்பி அழைக்கும் மூவர்.
1) ஜோதி பாரதி(அத்திவட்டி அலசல்)
2) பித்தன்
3) ராஜேஸ்வரி(ரசனைக்காரி, மூடுபனி)

அன்போடும், பண்போடும் தொடருங்கள் நண்பர்க்ளே...


.

1 comments:

கோவி.கண்ணன் said...

//4ம் வகுப்பு: சரியா ஞாபகம் இல்லை.//

4 ஆம் வகுப்பு படித்ததா ?
:)