பாவமும், புண்ணியமும் மனிதர்களுக்காக மதங்களால் கட்டமைக்கப்பட்டதே. மற்ற உயிரினங்களுக்கு கடவுள் இருப்போ, பாவ புண்ணியம் பற்றிய பயமோ இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் மனிதனைத் தவிர்த்து மற்ற உயிரினங்கள் தன்மை அனத்தும் இயற்கை நிர்ணயம் செய்து வைத்திருக்கிறது. மனிதனுக்கு அப்படி எந்த ஒரு தன்மையையும் இயற்கை நிர்ணயம் செய்யவில்லை, மாறாக மனிதனின் தன்மையை மனிதனே உருவாக்கிக் கொள்ளும் சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. இங்கே சுதந்திரமே நமக்குப் பிரச்சினையாகிப் போய் விட்டது தான் வருத்தத்துக்குரியது.
எந்த ஒரு உயிரினமும் உணவுக்காகவும், தற்காப்புக்காகவும் இன்னொரு உயிரை கொல்லும் பொழுது அது பாவம் பற்றி சிந்திப்பதில்லை. அது உயிர் வாழ இன்னொன்றை கொன்று தின்ன வேண்டும் என்று இயற்கை நிர்னயம் செய்திருக்கிறது. ஆதி மனிதனும் அப்படியே வாழ்க்கையை தொடங்கி இருக்க வேண்டும். அறிவு வளர்ச்சி ஏற்பட்ட காலங்களில் சிந்திக்கத் தொடங்கிய மனிதன் இரத்த ஓட்டம் கொண்ட உயிரினங்கள் அனைத்திற்கும், தீங்கு இழைக்கின்ற பொழுது தனக்கு வலி ஏற்படுவதைப் போல் அவைகளுக்கும் வலி ஏற்படும் என்று உணர்ந்தே பின்னாளில் கொல்லாமையை கடைபிடித்திருக்க வேண்டும்.
தொடர்ந்து சுயநலத்திற்காக மற்ற உயிரினங்களையும், மனிதர்களையும் துன்புறுத்துவோரை கட்டுப்படுத்தவே கடவுள் பெயரைச் சொல்லி பாவம் செய்தால் நரகத்திற்கும், புண்ணியம் செய்தால் சொர்கத்திற்குப் போவாய் என்று மதங்கள் வழி சொல்லி வந்திருக்கலாம். இந்த அளவிலே மட்டுமே இது உண்மையாக இருக்கும் என்று நம்புகிறேன்.
பாவமும் புண்ணியமும் மனிதனை நெறிப்படுத்துவதற்காக மனிதனால் ஏற்படுத்தப் பட்டதேயன்றி, எந்த ஒரு கடவுளாலும் பாவம் புண்ணியம் பற்றி வரையறை செய்யப் படவில்லை. கடமையில் இருந்து மனிதன் வழுவாமல் இருக்கவே பாவம், புண்ணியம் பற்றி மதங்கள் வழி போதித்திருக்க வேண்டும்.
தாகத்தால் ஒருவர் வாடுகிற போது அவருக்கு உதவுவது கடமை என்று போதித்தால் யாரும் அலட்சியப்படுத்துவர். அதனாலே உதவினால் புண்ணியம், உதவாமல் போனால் பாவம் வந்து சேரும் என்று மனிதனை மிரட்டியும் ஆசை வார்த்தை காட்டியும் கடமை தவறாமல் இருக்கச் செய்ய ஏற்படுத்தப்பட்டவையாக இருக்கும் என்றே நம்புகிறேன்.
தவறு செய்யாத, மனசாட்சிக்கு பயப்படாத மனிதன் என்று யாரும் இருக்க முடியாது என்பதை உணர்ந்தே மதவாதிகள் பாவத்திற்கு பரிகாரம் தங்கள் கடவுளிடம் இருப்பதாக சொல்லி தங்கள் மதத்தின் எண்ணிக்கையை உயர்த்தவும், கல்லாவை நிரப்பவும் விடுக்கும் அறைகூவல்களே பாவிகளே என்னிடம் வாருங்கள், குரானை ஏற்பவரை அல்லாஹ் மன்னிப்பார், ஈசனைப் பனிந்தால் சொர்க்கம் என்பதெல்லாம்.
பாவம் புண்ணியம் என்று இருந்தால் அதற்கான தண்டனையும், பலனும் ஒரு தானியங்கி நீதிமண்றங்களால் மட்டுமே வழங்கப்படமுடியும் என்றே நினைக்கிறேன். பரிகாரம் செய்வதாலோ அல்லது எந்த ஒரு மதக் கொள்கையையும் ஏற்றுக் கொள்வதாலேயோ நீங்கள் செய்த பாவங்களிலிருந்து தப்பி விட முடியாது. பாவம் புண்ணியம் என்று ஒன்று இருந்தால் அவை ஒன்றை வைத்து ஒன்றை ஈடு செய்ய முடியாது என்பது என் திடமான நம்பிக்கை. பரிகாரம் செய்வதும் எந்த ஒரு மதக் கொள்கையையும் ஏற்றுக் கொள்ளச் செய்வதின் மூலியமாக பாவத்திலிருந்து தப்பிவிடலாம் என்று மதநம்பிக்கையாளர் சொன்னால் அது வெறும் பிழைப்பு வாதமே. பாவ புண்ணிய விசயத்தில் கடவுளின் பங்கு என்று எதுவும் இருக்காது, அப்படி இருக்குமாயின் அது அநீதியே ஆகும்.
எந்த ஒரு கடமையையும் லாப நட்டக் கணக்குப் பார்த்துச் செய்வோர் கடவுள், மதநம்பிக்கையாளர்களாக இருந்தாலும் அவர்களை அவர்களது கடுவுளே ஏற்கமாட்டார். சொர்கமும் நரகமும் வெறும் மத நம்பிக்கை தான் என்பதை பெறும்பாலானவர்கள் புரிந்து கொள்வதேயில்லை. அந்தந்த மதத்தை கடைப்பிடிப்பவர்க்கு மட்டுமே அந்த மதங்கள் கட்டி(கற்பனையாக) வைத்திருக்கும் சொர்கத்தில் இடமிருக்கும், இந்து மதத்தை ஏற்காத ஒரு இஸ்லாமியரையோ, ஒரு கிறிஸ்துவரையோ இந்துக்களின் சொர்கம் அனுமதிக்காது, இதுலிருந்து தெரியவில்லையா கடவுள் இப்படி ஒரு கீழ்தரமான சிந்தனையுடன் சொர்கத்தை தனித்தனியாக நிருவியிருப்பாரா என்று?.
மதவாதிகள் காட்டும் சொர்கம் என்னைப் பொறுத்து சோம்பேரிகளின் கூடாரமாகத்தான் இருக்க முடியும் அல்லது சாமியார்களின் மடமாகத்தான் இருக்க முடியும். உழைக்காமல் எதுவும் கிடைக்கும் இடம் என்பதான ஒரு மாயையைத்தான் ஒவ்வொரு மதத்தினரும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
பலன் கருதி செய்யும் எந்த ஒரு நண்மையும் புண்ணியமாகாது, அதைப்போல பாவம் தன்னைத் தாக்கும் என்று தெரிந்தே பிறருக்கு உதுவது பாவமன்று புண்ணியமே.