காதல் பற்றி கண்ணதாசன் (மீள் பதிவு)

கண்ணும் கண்ணும் பார்க்கின்றன.
மனமும் மனமும் நினைக்கின்றன.
உடலும் உடலும் துடிக்கின்றன. இது காதல்.

இலக்கியத்தில் இதற்குத்தான் தலையாய இடம்.
சரித்திரத்தில் கணிசமான அளவு போர்க் களங்களை இதுதான் ஏற்படுத்துகிறது.
நீதி மன்றங்களில் பாதி மன்றம் இதனால் விளையும் தகராறுகளை கவனிக்கிறது.
தற்கொலைகளிலே முக்கால்வாசிக்கு இது தலைமை தாங்குகிறது.

பார்க்கப்போனால் பசியைவிடவா இது பெரிது. மானத்தை விடவா இது முக்கியமானது. ஆனால் பல்லூழிக்காலமாக உலகம் அப்படித்தான் கருதி வருகிறது. அந்நியர் வேதப்படி ஆதாமும் ஏவாலும் ஆரம்பித்து வைத்த கதை. தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறது.

காதல் யாரைத்தான் விட்டு வைத்தது, அணுவைத்துலைத்த விஞ்ஞானிக்கும் மனைவி இருக்கிறாள். அகிலத்தை வளைக்க விரும்பிய சர்வாதிகாரியும் அந்தரங்கத்தில் ஒரு காதலியை வைத்திருந்தான். கணவனைக் கொன்று, அவன் மனைவியைத் திருடிய ஒரு மன்னன் அதற்கும் காதலென்றுதான் பேர் சொன்னான்.


காதல் நாடகம் எழுதாத நாடக ஆசிரியர்கள் அநுதாபத்திற்குரியவர்கள். காதல் கதை எழுதாத கதாசிரியர்கள் கால வெள்ளத்தில் அழிந்து போகிறவர்கள். காதல் கவிதை பாடாத கவிஞர்கள் கற்பனையே இல்லாதவர்கள். காதல் ஒரு முறை தான் வருமென்று இலக்கியங்கள் கூறுகின்றன. அனால் வாழ்க்கையில் பலமுறை வருகிறதே. நான் நினைக்கிறேன் ஒரு பெண்ணிடம் ஒருமுறை தான் வருமென்று சொல்லி வைத்திருப்பார்கள் போலிருக்கிறது.

கொஞ்சம் கவனியுங்கள்.

இலக்கியத்தோடு நான் முரன்படுகிறேன்! இளமையில்தான் காதல் வருமென்கிறது இலக்கியம். இளமையில் வருவது காதலல்ல என்பது என் கருத்து.
உருவத்தைப் பார்த்து உடல் துடிக்கிற தென்றால், அது பித்தம். பள்ளியரையிலேயே இருக்கத் தோன்றுகிறது யென்றால், அது மயக்கம். பகலுமில்லை இரவுமில்லை யென்றால் அது சதைப்பசி.
இளமைக்காதலுக்கு இது தான் மிஞ்சுகிறது.

இது எப்படி காதலாகும்?
வெறித்தனம் ஓயும்போது வரும் அன்புதான் காதல்.
இலக்கியம் இளமைக்காதலை பறைசாற்றுகிறது. சரித்திரம் இளமைக் காதலைச் சாவிலே முடிக்கிறது. காதல் எட்டி நிற்கும் வரை இனிக்கிறது. கட்டி முடித்த பின் கசக்கிறது.

தத்துவம் கிடக்கிறது, அநுபவம் இதைத்தான் சொல்கிறது. நிறைவேராத காதலே அழியாத இலக்கியம்! காதல் தூய்மையானது, அது தோல்வியடைந்தால்! காதல் உயர்வானது, அது நிறைவேராவிட்டால்! தோல்வியுரும் காதல் எதுவோ அதுதான் காதல்!

என் தத்துவம் இதுதான்: காதல் இரண்டு வகைப்படும் ஒன்று தோல்வியுறுவது! மற்றோன்று முப்பது வயதுக்கு மேல் வருவது.

காதல் பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்