வக்கீல் என்று ஒரு சாதி

சட்டம்

கையில் குழந்தையுடன் ஒருத்தி ஆற்றை நோக்கிப் போய்க்கொண்டிருந்தாள்.
தூரத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.
“நில், குழந்தையைக் கொல்வதும் தற்கொலை செய்து கொள்வதும் சட்ட விரோதம், தெரியுமா?”
அவள் நின்று திரும்பினாள்;
“சட்டமா என்ன அது? எங்கிருக்கிறது?”
“உன்னைத் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது; குழந்தையைக் கொன்றாலும், நீ தற்கொலை செய்து கொள்ள முயன்றாலும், அது உன்னை பிடித்து விடும்!”

“நான் பெற்ற குழந்தையை நான் கொல்கிறேன். சட்டம் யார் என்னைத் தடுப்பதற்கு?”
“பெறுவது உன் பொறுப்பு.”
“எங்களுக்குப் பசி எடுப்பது யார் பொறுப்பு?”
“இயற்கையின் பொறுப்பு!”

“காரணமானவர்களை விட்டு விட்டு, காரியம் செய்பவர்களைத் தண்டிப்பதுதான் சட்டமா?”

“சட்டத்திற்குக் காரணத்தைப் பற்றிக் கவலையில்லை. ஏன் நடந்தது என்பதை பற்றி அது சிந்திப்பதில்லை.எப்படி நடந்தது என்பதையே அது ஆராய்கிறது!”
“முட்டாள்தனமான சட்டம். ஒவ்வொரு குற்றமும் ஒவ்வொரு காரணத்தோடு தான் செய்யப்படுகிறது. அந்தக் காரணங்களில் சிலவற்றிற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் தப்பிவிடுகிறார்கள். காரியம் செய்வோர் மட்டும் பிடிபடுகிறார்கள்.”

“சட்டத்தில் ஓட்டைகள் இருக்கலாம். ஆனால் இருக்கின்ற சட்டம் , உன் செயலைக் குற்றம் என்கின்றது!”

“ஓட்டை உடைசல்களுக்கெல்லாம் நான் கட்டுப்பட வேண்டிய அவசியம் என்ன? சோறு போட வக்கில்லாத சட்டத்திற்கு, உயிர்களின் மீது மட்டும் இரக்கம் எங்கிருந்து வந்தது? போய் உங்கள் சட்டத்திற்குச் சொல்லுங்கள். வாழ முடியாதவர்கள் குற்றங்களுக்கு ஆட்படுகிறார்கள். சட்டத்தின் இருண்ட கரங்கள் பாம்புகளை விட்டு தவளைகளைக் கொல்கின்றன.எங்கள் துயரங்களைத் தீர்க்க யோக்கியதையில்லாதவர்கள், எங்கள் உயிர்களை ஏன் தொடர்ந்து வருகிறீர்கள்? பசியால் திடித்து இயற்கையாகவே மாண்டு போனால், அது உங்கள் சட்டத்திற்குச் சம்மதமே! அவ்வளவு நாள் துடிப்பானேன், என்று ஒரு நாளில் சாக முயன்றால், அது மட்டும் விரோதமா?

வாழ்க்கையின் துயரத்தைக் காணாதவர்கள் சட்டத்தை படைத்தார்கள். அந்த முதலாளித்துவத்திற்கு நாங்கள் ஏன் ஆட்படவேண்டும்? பத்துக் கோடிப் பேர்களின் உள்ளங்களை கேட்டறிந்த பிறகா பத்துப்பேர் சட்டங்களைப் படைத்தார்கள்? வறண்டு போன வயலில் மழை பொழியும்படி உங்கள் சட்டம் மேகத்திற்கு ஆனையிடுமா? விளைவிக்க யோக்கியதை இல்லாதவர்கள், அறுவடையை ஏன் தடுக்க வருகிறீர்கள்?

தருமம் புதைக்கப்பட்ட இடத்தில் உங்கள் சட்டம் உற்பத்தியாகியிருக்கிறது. அதனால் தான் தருமத்தின் சாயல் கூட இல்லாமல் அது வளர்ந்து இருக்கிறது. பழுதுபட்டுப்போன கோட்டையில் உங்கள் சட்டம் விழுதுவிட்டு வளர்ந்திருக்கிறது. சட்டம் நியாயத்துக்காகப் போராடவில்லை என்பதும் அது சாட்சிகளோடு தான் மாரடித்துக் கொண்டிருக்கிறது என்பதும் உங்கள் புத்திக்கு எட்டவில்லையா?

வக்கீல்களுடைய திறமை, நீதிபதிகளை முட்டாள்களாக்குவதை நீங்கள் காணவில்லையா?சட்ட விளக்கை ஏற்றி வைத்தவருக்கு நல்ல எண்ணம் இருந்திருக்கலாம்.அந்த விளக்கை சாட்சிக் குடத்துக்குள் அடைது வைத்து, சதிராட்டம் ஆடுகிறது உலகம். கட்டுப்பாடானதும் முழுக்க உண்மையையே கண்டு பிடிப்பதுமான ஒரு சட்டம் உருவாக்கப்படும் வரையில் இன்றைய சட்டத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை.

பணம் படைத்தவர்கள் நீதியை விலைக்கு வாங்குகிறார்கள். ஏழைகளைச் சட்டம் பழி வாங்குகிறது.சட்டம் பலமான சாட்சியங்களை கேட்கிறது. சாட்சி இல்லத நிரபராதி, குற்றவாளி: சாட்சியம் படைத்த குற்றவாளி, நிரபராதி.பொய்யும் பணமும் உங்கள் சட்டத்தின் இரு கண்கள். நாங்கள் தருமத்தை தேடிக்கொண்டிருந்தபோது நீங்கள் சட்டத்தைக் கொண்டுவந்தீர்கள். தருமம் செத்துக் கிடந்தது; சட்டம் எங்களை கைவிட்டதும் வக்கீல் என்று ஒரு சாதி, சட்டத்தின் ஓட்டைகளுக்குள்ளே புகுந்துகொண்டு விளையாடுகிறது.வக்கீல் என்ரொரு சாதி இருக்கும் வரையில் சட்டம் தானே குற்றம் புரிந்து கொண்டுதான் இருக்கும்.”

“என்ன தான் நீங்கள் சொல்க்றீர்கள்?”

“சட்டம் ஒரு குற்றவாளி; வக்கீல்கள் குற்றவாளிகள்; இதில் எந்தக் குற்றவாளிக்கு எங்களை குற்றம் சாட்ட உரிமை இருக்கிறது? நாங்கள் வந்தோம், போகிறோம். சொந்தப் பொறுப்பில் வந்தவர்கள், சொந்தப் பொறுப்பி போய் விட்டார்கள் என்று மட்டும் உங்கள் சட்டத்த்ற்குச் சொல்லுங்கள்.அவள் நடந்தாள்; மறைந்தாள். இயற்கையின் சட்டப்படி ஓடிக்கொண்டிருந்த நதி அவளையும் அவள் குழந்தையையும் அழைத்திக் கொண்டு சென்றது.”

கதை முடிகிறது.


மனிதனின் உண்மையை மறைக்கும் குணம் தான் சட்டங்களை உற்பத்தி செய்தது! உற்பத்தி செய்யப்பட்ட சட்டம் அந்த உண்மையை இறுதிவரை மறைப்பதற்குத் தானும் துனை புரிகிறது!
தடுப்பதற்குப் போட்ட வேலியே அழிவிற்கு தலைமை தாங்குகிறது. `நியாயம் நீதி` இவையெல்லாம் மிகவும் அலங்காரமான சொற்கள்.
குற்றம் புரிந்தவனும் தனக்கு நியயம் கேட்கிறான்; குற்றத்திற்கு ஆட்பட்டவனும் தனக்கு நியாயம் கேட்கிறான். யாருக்கு அதை வழங்குவது என்பதை பணம் முடிவு செய்கிறது!
பாவம் நீதிபதிகள்!
எப்போதவது அதிசயமாக உண்மையைக் கண்டுபிடித்தும் வருகிறார்கள். ஆனாலும் அது உண்மையைல்ல என்று எதிரியின் வக்கீல் சாதிக்கிறார்.`அப்பீல்` என்ற பெயரிலே மேல் நீதிமன்றம் அந்த உண்மையை மேலும் போட்டு உருட்டுகிறது.

இப்போது நம்மில் யாருக்கும் நியாயம் தேவை இல்லை!

நியாயத்திற்கே நியாயம் தேவைப்படுகிறது.

`விபசாரம் செய்யக்கூடாது` என்கிறது சட்டம்.அந்தச் சட்டத்தின் விதிப்படி, விபசாரத்தில் ஈடுபட்டவர்களில் பெண்ணை மட்டும் தான் தண்டிக்க வேண்டும் என்பது விதி.குற்றத்திற்கு முதற்காரணம் ஆடவனாக் இருந்தாலும், சட்டம் அவனச் சாட்சியாக ஏற்றுக்கொண்டு குற்றக் கூண்டிலே பெண்ணை ஏற்றுகிறது.
சட்டத்தின் காவலர்கள் குறிப்பிட்ட அளவு குற்றத்தக் கண்டுபிடித்தால் பதவியும், பரிசும் கிடைக்கும்.அதற்காக அவர்கள் குற்றத்தை உற்பத்தி செய்கிறார்கள்.
வேடிக்கையான சட்டம், வேடிக்கையான நீதிபதிகள்! சந்தேகத்தின் பேரில் ஒருவன் கைது செய்யப்படுகிறான். ` ஜாமீன் கொடுக்க ஆள் உண்டா? என்று நீதிபதி கேட்கிறார். இல்லையென்றால் உடனே தண்டித்து விடுகிறார்.
ஜாமீன் கொடுக்க ஆள் இல்லாததே சட்டப்படி ஒரு பெரிய குற்றமாம்.
ஆமாம்!
சட்டம் புதிய புதிய குற்றவாளிகளை விளைச்சல் செய்கிறது. குற்றம் என்னும் நிலத்தை வக்கீல்கள் உழுகிறார்கள்; சாட்சிகள் விதை விதைக்கிறார்கள்; பணம் மழை பொழிந்ததும், விளைத்த பயிரை நீதிபதிகள் அறுவடை செய்கிறார்கள்.
விடிந்து விட்ட பொழுதுக்கு இரவைப் பற்றிக் கவலை இல்லை. ஆனால் முடிந்துவிட்ட நிக்ழ்ச்சி சட்டத்தப் பற்றிக் கவலைப்படுகிறது.

திருமண வீடுகளில் ஒரே மகிழ்ச்சி, இழவு வீடுகளில் சிலர் அழுகிறார்கள், சிலர் அலறுகிறார்கள்; சிலர் சிலையாக சமைந்துபோய் உட்காருகிறார்கள். ஓலமும் ஒப்பாரியும் ஊரெங்கும் கேட்கின்றன.
ஒரு வீட்டில் சிரிப்பு, மற்றொரு வீட்டில் அழுகை.

நீதிமன்றங்களுக்குச் சென்றால் அது திருமண வீடாகவும் இல்லை இழவு வீடகவும் இல்லை. முகத்திலே களையே இல்லாத புதுமைகள்; இருதயத்தில் இரக்கமே இல்லாத பிராணிகள்; ஒவ்வொரு பகுதியிலும் பிணங்கல்ளைப் போல நடந்து கொண்டிருந்தார்கள்.

ஆமாம், இன்பத்துக்கும் துன்பத்துக்கும் இடையிலே உள்ள குழப்ப உலகம் நீதிமன்றம். குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான்; மனிதன் சட்டத்தப் படைத்தான்; சட்டம் மனிதனைப் பழையபடி குரங்காக்கி விட்டது!